உலகப் பெருவெளியில் அடையாளங்களை இழந்து, சுயமிழந்து நாடற்றவர்களாய,; ஏதிலிகளாய் தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் உணர்வுகளும், வலியின் அவலக்குரல்களும் கூட தனிமைப்படுத்தப்பட்டு சிறைபிடித்து அடைக்கப்கப்படுகிறது. வலிமை மிக்கவர்களாக, உயிர்ப்பு நிறைந்தவர்களாக வாழ்ந்தவர்கள். உண்மையான முகம் சிதைந்து, வாழ்க்கையை நிலை நிறுத்திக் கொள்வதற்க்கும், தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கும் புலம்பெயர்ந்த நாட்டின் சூழ்நிலைக்கேற்ப ஒரு போலியான முகத்திரையை அணிந்து, தனக்குள்ளேயே வசிக்கும் அவலம்.
முகமிழந்து, அடையாளமிழந்து, பண்பாடு, காலச்சாரம், வாழ்க்கைநெறி, எதிர்காலக் கனவுகள், அத்தனையும் தனக்குள்ளே புதைத்து. புலம்பெயர்ந்த நாட்டில் அணிந்துகொண்ட முகத்திரையின் அடையாளமாய் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றம் கொள்ளும் இனத்தில், ஏதிலியாய் பிறந்து, ஏதிலியாய் வளர்ந்து, முகாம் வாழ்க்கையே பண்பாடாய், கலாச்சாரமாய் உள்வாங்கிக் கொள்ளும் இளைய தலைமுறையின் எதிர்காலம் என்னவாகும்,
அகதி வாழ்க்கையில் தன்னையே இழந்து கொண்டிருக்கும் எம் இனத்திற்கு அதன் வலி புரியாமல் இல்லை, தங்கள் இழப்பை, வரலாற்றை, இழக்கை பதிவு செய்ய எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் புரிதலின்மையால், தவறான கண்ணோட்டத்தால் புலம்பெயர்ந்த வாழ்வையே கேள்விக்குறியாக்கிவிடுமோ என்னும் அச்சம், தன்னிலை உணர்த்த எடுக்கப்படும் முயற்சிகளையும் தடுக்கிறது.
இனப்படுகொலையிலிருந்தும், வன்கொடுமையிலிருந்தும் விலகியிருந்தாலும், ஈழத்தில் உறவுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் உயிர்ப்பிக்கும் உணர்வுரீதியான வெளிப்பாட்டினை, அகத்தில் அடக்கிவைக்கும்போது ஏற்படும் வலியை, மண்ணையும் மக்களையும் சுவாசித்து அகதியாய் அடையாளமிழந்து, தங்கள் இருப்பை பதிவுசெய்ய முடியாமல் வலியோடு வாழ்பவர்களால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும்.
அகதி வாழ்க்கை
உயிருக்கும் உணவுக்கும்
நம்பிக்கை தருகிறது
எங்கள்
உணர்வுகளை தின்று.
No comments:
Post a Comment