Friday, June 13, 2008

வலி -- சூ. ம. செயசீலன்

விடுதலை முகாமின் வீரச்சிறார்களே!
வரைந்து கிடப்பவைகளும், எழுதி இருப்பவைகளும், செவிவழி கடத்தப்பட்டவைகளும் வலி நிறைந்தது வரலாறு, வலியால் நிறைந்ததும் வரலாறு என பதிவு செய்திருக்கின்றன வரலாற்றை.
திசையும் மொழியும் பிரித்து வைத்தாலும் இணைத்திடுவது வலி. முகம் காணா நட்பு கொண்டு நண்பன் கோப்பெருஞ்சோழன் இறந்ததும் வடக்கிருந்து உயிர் துறந்த பிசிராந்தையாரை புறனானூரும், ‘இமயமலையில் ஒருவன் இருமினான் குமரியிலிருந்து மருந்து கொண்டோடினான்’ என பாரதிதாசனும் பதிவு செய்தது ‘வலியில் இணைதல்’. சுழலும் பூமியின் எத்திசையில் இருப்போரின் வலியிலும் வலிகாண்பதும், பகுத்தறிவற்ற உயிர்களுக்காகவும் உரிமை பேசுவதும் வலியில் இணைதலின் தொடர்ச்சியே.
‘வலியில் இணைதல்’ ஆயுதம் வழி நிகழ்வது மட்டுமல்ல. உணர்வின் வழி, ஊக்கத்தின் வழி, பதிவதின் வழி நிகழ்வது. ‘ நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என எதிரி தீர்மானிக்கும்’ போது ஆயுதமும், அறமும் கால இடைவெளியில் முன்னிலை பெறுவதும் அத்தகையதே. விடுதலை வேள்வியில் தீபமேற்றிய ஒவ்வொரு நாடும் தந்துள்ள பதிவு இது.
கரம் கோர்த்து களம் கண்டு, 1948-ல் கண்ட சுதந்திரம் தமிழை, தமிழரைக் காக்குமா? என சிந்தி;த்த காலத்தில் நிகழ்ந்தேறிய இனப்பாகுபாடும், படுகொலையும் உணர்வுகளை உசுப்பியதும், உணர்வாளர்களை செயல்முனையத் தூண்டியதும், ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைகளுக்கு இவ்வரலாற்றை சொல்லிச் சொல்லி வளர்த்ததும் வரலாறு. தலைவரும் விதிவிலக்கல்ல (குசழவெடiநெஇனுநஉ.30இ 1985).

ஆண்டுதோறும் பாடசாலைகளிலும், பணியிடங்களிலும், பொது இடங்களிலும் பெற்ற வலி ‘எமது தலைவிதியை நாமே நிர்ணயிக்கும் உரிமை பெற்றவர்களாக, இறைமை பெற்றவர்களாக இருக்க வேண்டும்’ என ஒவ்வொருவரையும் எழுப்பியது. 1983-ல் தமிழர்களை கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி மொத்தமாக இடம்பெயர வைத்த ஆடிக்கலவரம் எழும்பிய கரங்களை இணைத்தது. இணைந்தெழுந்தவர்கள் கம்யூனிசம் பேசி…..பிறகு ஆயுதம் கண்டார்கள் ஆயுதம் தாங்கி….. பிறகு மார்க்சிய- லெனினிய பாதைக்கு வந்தார்கள் சிலர் ஆட்சியாளர்களுடன் சமபந்தி கண்டார்கள்.
அமைதியைக் குலைத்தவர்களாலும், அமைதிக்கு வந்தவர்களாலும் வலி அதிகமானது. முதலாமவர்கள் ; நல்ல முடிவு பாராளுமன்றத்தில் கிடைக்குமென்றார்கள், அழித்திட சட்டமும் அங்கே இயற்றினார்கள். தமிழ் பிரதிநிதிகளுக்கு பாராளுமன்றத்தில் தடை, பத்திரிகை சுதந்திரந் தடை, மக்கள் வாழ்விடங்களில் குண்டு மழை, உணர்வாளர்களைக் கொன்று குழிகளைத் தோண்டித் தோண்டி புதைத்துப் போன செம்மணி புதைவெளி என சுதந்திர முன்னெடுப்புக்காக அடைந்த வலிகள் அதிகம்.
இரண்டாமவர்கள் 1987 அக்டோபர் 10-ம் திகதி தீட்டிய திட்டத்தால் அதே நாளில் ஈழமுரசு மற்றும் முரசொலி பத்திரிகை அலுவலகங்கள் தாக்கி அழிக்கப்பட்டன. அக்.21-ம் திகதி மருத்துவமனை தாக்கப்பட்டபோது பிணங்களோடு பிணங்களாக படுத்து தப்பித்த சோகம் நிகழ்ந்தது. ஏன் கைது செய்யப்பட்டோம்? எதற்கு அடைக்கப்பட்டோம்? எப்போது விசாரணை? எப்போது விடுதலை? என தனக்கும் தெரியாமல், அதிகாரிக்கும் தெரியாமல் சிறை இருட்டுக்குள் அடிபட்டவர்கள் அதிகம். இவர்களில் பலர் இன்றும் நம் வீடுகளில் அல்லது நம் முகாம்களில் வரலாறாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பதிவுசெய்ய வேண்டியவைகள் நிறைய உண்டு.

அரை நூற்றாண்டுக்கு முந்தைய பெற்றோர்களின் வேகமும், விவேகமும், வரலாற்றை பதிவுசெய்யவேண்டியதன் அவசியமும் புரிந்துள்ளவர்கள் இன்று அரிதாகிப் போய்விட்டார்களோ என்ற அச்ச உணர்வு மேலோங்குகிறது. வலியோடு போராடி ‘நிதித்துறை’, ‘நீதித்துறை’, ‘காவல்துறை’, ‘வனத்துறை’, அரசியல் துறை’ என அமைத்து நமக்கான எதிர்காலத்தை உருவாக்கி வரும் வீர வரலாற்றை உள்ளத்தில் ஏந்துவதும், ஏற்றுவதும், காலத்தின் அவசியம்.
அவசியம் மறந்த நமக்குள்ளே கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் எத்தனை கொள்ளைகள், காதல் விளையாட்டுக்கள், களியாட்டங்கள், உறவு தவறிய உறவுகள், தமிங்கில உரையாடல்கள்….இதில் ஏதாவதொன்று நம் வரலாறு சொல்கிறதா? வரலாறு தெரியாத புதிய இனம் இவ்வுலகில் வளருவது பேரழிவல்லவா?. அது நம் தமிழினம் என்பதும் அதை உருவாக்குவது நாம் என்பதும் இழிவல்லவா?
வரலாறு தெரியாது உருவாகும் நம் இனம் ஒருநாள் சுதந்திர பூமிக்கு செல்லும். மலசலக் குழிக்குள் முட்டி நிற்கும் நம் வீர எலும்புகள் எப்படி இங்கு வந்ததெனத் தெரியாது விழிபிதுக்கும். வீடு கட்ட தோண்டும் குழிகளில் இருந்து மொத்தம் மொத்தமாய் வெளிவரும் ஆடைகளும், எலும்புகளும் நம் வீரமக்களுடையது எனத் தெரியாது குறிபார்க்கும், செய்விணை எனச்சொல்லி வலி நிறைந்த வீரத்தை அடகுவைக்கும். உனது வீரமும், வீர வரலாறும் மொத்தமாய் சிதைந்து போகும். இதுதானா நமது இலட்சியம்?.
முடிவெடுங்கள். தூய்மையான வரலாறு பாய்ச்சப்படும் இரத்தம் துணிவுபெற்றெழும், தனக்கான வரலாற்றை தானே பதிவுசெய்யும் என்பது நம் முன்னோர்கள் கற்றுத்தந்த பாடம். எப்போது நாம் புரிந்துகொள்ளப்போகிறோம் இதை?

நாவலர் மன்றம்

--------------------------------------------------
(நாவலர் உள்ளே வருகிறார்)
மாணவர்கள் : வணக்கம் நாவலரே!
நாவலர் : வணக்கம். அதிகமான உற்சாகத்துடன் இருக்கிறீங்க. ஏதாவது சிறப்பானது...
கனிமொழி : ஓம். இந்த மாதம் இரு துறைகளில் சிறந்து விளங்கின ச.முருகானந்தம் பற்றி தெரிஞ்சுக்கப்போறோமே அதான்…
நாவலர் : மகிழ்ச்சி;. இருதுறைகளில் சிறந்து விளங்கினார்ன்னு எப்படிச் சொல்றீங்க?
இனியன் : நம்ம நூலகத்தில உள்ள ச.முருகானந்தம் அவர்களோட நூல்களில் இருந்து தெரிஞ்சுக்கிட்டோம்.
அபிநயா : சிறந்த எழுத்தாளராகவும்,சிறந்த மருத்துவராகவும் இருப்பதாக வாசித்தோம் நாவலரே.
நாவலர் : நீங்க சொன்னது மிகச்சரி.
நாவலர் : ச.முருகானந்தம் எங்கு படித்தார் என்பதையும் நீங்களே சொல்லுங்க.
இளவழகி : ஓம் சொல்லுறோம் நாவலரே! ச.முருகானந்தம் அவர்கள் கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி, யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீடம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.
நாவலர் : மிகச் சரியாக சொன்னீங்க. மாணவராக இருந்தபோதே எழுத ஆரம்பித்த ச.முருகானந்தம் அவர்களின் முதல் சிறுகதை 1976-ல் தினகரன் பத்திரிகையில் வெளியானது. அன்றிலிருந்து இன்றுவரை 175க்கும் மேலான சிறுகதைகள், 5 குறு நாவல்கள், 50க்கும் மேலான கவிதைகள் போன்றவைகளை எழுதியுள்ளார்.

கனிமொழி : நாவலரே, அய்யாவின் இரண்டு கதைகளை நான் வாசித்தேன். இரண்டுமே மக்கள் பிரச்சினைகளை மையமாக வச்சுத்தான் எழுதப்பட்டிருக்கு…
நாவலர் : ஓம். துன்பங்களும், பிரச்சனைகளும் நிறைந்துள்ள அன்றாட நடைமுறை வாழ்க்கை அனுபவங்கள்தான் ச.முருகானந்தம் அவர்களின் கதைக்கரு.
(மாணவர்கள் வியப்புடன் பார்த்தல்)
என்ன இப்படி பார்க்கறீங்க. சுற்றி நெருப்பு எரியும் போது அதைத்தானே முதலில் எழுத வேண்டும்.
பனிமலர் : இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லுங்க நாவலரே!
நாவலர் : ம்…சொல்றேன். சிறுகதை எழுத ஆரம்பித்த காலங்களில் சமூகத்தில் நிலவக்கூடிய சாதியம், சீதனம், பெண்ணியம், வர்க்க முரண்பாடுகள், மனித மனங்களின் சிக்கலான உணர்வுப் போராட்டங்கள் போன்றவைகளை கருப்பொருளாக வைத்து எழுதினார்.
யாழினி : பிறகு…
நாவலர் : போரும் அதன் அழிவுகளும் நிறைந்த போது அந்த இழப்பினையும், வலியையும் கருப்பொருளாகக் கொண்டு எழுதினார்.
பூவிழியாள் : அப்படின்னா அய்யாவோட நூல்களை வாசித்தாலே; நம் வரலாற்றை நாம் தெரிஞ்சுக்க முடியும் அப்படித்தானே…
நாவலர் : நிச்சயமாக. ‘தரை மீன்கள்’, ‘மீன் குஞ்சுகள்’, ‘இது எங்கள் தேசம்’, ‘இனி வானம் வசப்படும’;, ‘ஒரு மணமகளைத் தேடி’ எனும் 5 சிறுகதைத் தொகுதிகள், ‘நீ நடந்த பாதையிலே’ என்னும் கவிதைத் தொகுதி, ‘நாளை நமதே’ என்ற கட்டுரை நூல் என மொத்தம் 7 நூல்கள் வெளிவந்துள்ளன.
நளன் : அய்யா அவர்கள் பெற்ற பரிசுகளையும் சொல்லுங்க நாவலரே!
நாவவர் : சிறுகதைகள் மற்றும் கவிதைகளுக்காக 15 முறைகளுக்கும் மேலாக பரிசுகள் பெற்றிருக்கார். 2005 ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான சாகித்திய விருது இவரது ‘தரை மீன்கள்’ நூலுக்கு கிடைத்தது. ‘மீன் குஞ்சுகள்’ சிறுகதை சென்னை இலக்கிய சிந்தனை பரிசு பெற்றது.
கனிமொழி : மருத்துவராக ஆற்றிய பணிகளையும் சொல்லுங்க நாவலரே!
யாழினி : நான் சொல்றேன் நாவலரே!
நாவலர் : மருத்துவப் பணி செய்ய நியமனக் கடிதம் பெற்றுக் கொண்ட அய்யா அவர்கள் வன்னியில் யானைகள் சூழ்;ந்த அக்கராயன் பகுதிக்கு வந்தார். யானை பயமும் நுளம்புக் கடியும் இருந்ததால இரவு மட்டும் தங்கிவிட்டு சொந்த ஊருக்குப் போயிட்டாரு…ஆனாலும் திரும்பி வந்து அக்கராயன், வன்னேரிக்குளம் ஆகிய குடியேற்றக் கிராமங்களில் 30 ஆண்டுகள் சேவை செய்தார்.
நளன் : இலங்கை மாதிரி நாட்டுல தமிழ் மருத்துவர்கள் பணிபுரிவது கடினமாச்சே.
குழலினி : ஓம். பொதுமக்களுக்கும், போராட்டத்தில் அடிபட்டவங்களுக்கும் மருத்துவ சேவை செய்யும் போது பலமுறை விசாரிக்கப்பட்டிருக்கிறார். பயமுறுத்தலும் நிகழ்ந்தது. ஆனாலும் துணிவுடன் சேவை செய்தார்.
யாழினி : அதோட அப்பகுதியில் கல்வியறிவைப் பெருக்கினார். மூடநம்பிக்கையைக் குறைத்தார், சுற்றி இருந்த கிராமங்களில் மது ஒழிப்பைக் கொணர்ந்தார்.
பூவிழியாள் : கேட்கவே மிகவும்; மகிழ்ச்சியாக இருக்கு.
நாவலர் : அடுத்தமாத நாவலர் மன்றத்திற்கு மூத்த எழுத்தாளர் நந்தி அவர்களைப் பற்றி தகவல் சேகரித்து வாருங்கள், சரியா…. நன்றி.
மாணவர்கள் : நன்றி நாவலரே.
-------------------------------------------------

ஈழகவிதாசன். மா. ஞானசூரி

---------------------------------

உயிருள்ளவை அனைத்தும் உணரும் நிகழ்வே வலியாகும். வலி என்பது இப்படியானது அப்படியானது என விளக்கிக் கூற முடியாது. அவற்றை ஒவ்வொருவரும் உணர்ந்தால் மட்டுமே முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்புவியிலும் பிறந்த மனிதர் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வலிக்கு ஆட்பட்டுச் செல்கிறார்கள். ஒரு சாரார் வலிகளை தோற்றுவிக்கிறார்கள். இந்த 21- ஆம் நூற்றாண்டிலும் விஞ்ஞானம் வேகமாக வளர்ச்சியடையும் காலத்திலும் மனிதன் வலிகளுக்கு ஆட்படுவது விந்தையாகத்தான் உள்ளது. தாய்க்குத்தான் தெரியும் பிரசவத்தின் வலி. பின்பு அவள் மழலையின் குரல் கேட்டதும் தன் வலிகளை மறந்து போகிறாள். ஏன் ஈழமண்ணை பிரிந்து வாழும் நாமும் இந்த தாய்மைக்கு ஈடானவர்கள்தான். ஆனால் தமிழகத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகளான தடுப்பூசிக்கு குழந்தைகள் பலி, தாமதமான பிரசவத்தினால் தாய் இறப்பு, குழந்தைகள் காணாமல் போதல், சிறுநீரக மோசடி, மருத்துவ மாணவர்களும், மருத்துவர்களும் செய்த போராட்டங்கள். வலிகளை தோற்றுவிப்வைகளாகவே உள்ளன. சமீபத்திய ஆய்வுப்படி 100 இல் ஒரு பிரசவம் இறப்பில் முடிகிறது.
இன்றைய காலகட்டத்தில் மருத்துவத்துறை பல சாதனைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கேதான் சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இந்த உலகில் உயிரோடு உலாவரும் தெய்வங்கள் மருத்துவர்கள்தான். நம் தமிழ்ப்பெண்கள் கணவனைத் தவிர வேறு ஆண்களை தம்மை தொட அனுமதிக்காதவர்கள் மருத்துவ தெய்வத்தை அனுமதிக்கிறார்கள். ஆனால் இன்று அத்தெய்வங்கள் ஆடும் ஆட்டம் தாங்க முடியவில்லை. சிறுநீரகக் கொள்ளையர்களாகவும் மன்மத சாமியார்களாகவும் அவதாரம் எடுத்து ஆடுகிறார்கள். இவர்கள் ஒருபக்கம் இருக்க மறுபக்கம் கிராமங்களில் சேவைசெய்ய எதிர்ப்புத் தெரிவித்து மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்ம் உண்ணாவிரதம் மறியல் என போராட்டங்களை நிகழ்த்தியது வேதனையான நிகழ்வு. அரசின் மருந்துக்கு உள்ள வீரியம் அரசு மருத்துவர்களுக்கு இல்லாது ஏன்? “பணம் பத்தும் செய்யும்” என்பது உண்மைதான்.

இந்நேரத்தில் நம் புலம்பெயர்ந்த மாணவர்களுக்கு தொழிற்கல்விக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதற்கான காரணத்தை கூறவேண்டியது முக்கியமானதாகும். 2004 - 2005ஆம் கல்வியாண்டில் இடஒதுக்கீடு வேண்டி பலஆயிரம் கையெழுத்துகளோடு மனு ஒன்று அன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அவர்கள் அதற்கு கேட்ட கேள்வியும் பதிலும் நம்மை வெட்கித் தலைக்குனிவுக்கு ஆளாளக்கியது. கடந்த பத்தாண்டுகளில் பல மாணவர்கள் மருத்துவம் பயின்று சிலர் பட்டம்பெற்று வந்திருக்கிறார்கள் மகிழ்ச்சியான விசயம்தான். ஆனால் இவர்கள் அனைவரும் முகாம்களில் சேவை செய்கிறார்களா? இல்லையே பலர் வெளிநாடுகளக்குச் சென்றுவிட்டார்கள். இருப்பவர்களும் எம் மக்களுக்கும் சேவையாற்றவில்லை முகாம் மக்களுக்கும் பயன்படவில்லை. இப்படியிருக்கும்போது இடஒதுக்கீடு தேவைதானா? இடஒதுக்கீட்டால் நமக்கும் நஷ்டம்தானே மிச்சம் என்றார்கள். இந்தச் சூழலிலும் புதுச்சேரி முகாமில் உள்ள நம் மாணவர் புதுச்சேரி “ஜிப்மர்” மருத்துவமனையில் மருத்துவம் செய்வதை ஆனந்த விகடன் நேர்காணல் கண்டது ஆறுதலான செய்தியாகும்.
“வாடிய பயிரைக்; கண்ட போதெல்லாம் வாடினேனே” என்ற வள்ளலார் நம் மனித மரபில் வந்;தவர்தானே, கருவுறாது கருணையுற்ற அன்னை தெரசா, பாரத சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த மகாத்மா காந்தி அனைவருமே பிறர் வலிகளை தம் வலிகளாய் எண்ணியவர்கள் நான் சொல்லிக்கொள்வது இதுதான். மருத்துவத்துறை ஒரு பொன்னான சேவைத்துறை. சேவை செய்யும் நோக்கமிருந்தால் மருந்துவம் படியுங்கள். பணம் சம்பாதிக்க வேண்டுமானால் வேறுபல துறைகள் இருக்கின்றன. தயவு செய்து மருத்துவத்துறையை எடுத்து மக்கள் உயிரோடு விளையாடாதீர்கள். பத்து இருபது சம்பாதிக்கும் ஆட்டோக்காரன் “பிரசவத்திற்கு இலவசம்” என எழுதி உதவும்போது மருத்துவர்களாகிய உங்களால் ஏன் முடியவில்லை? மருத்துவர்கள் நோயாளிகளின் வலிபோக்க வந்த தெய்வங்கள். வலிபோக்கிகளாய் ஆனால் உயிர் பிழைத்து உளமார வாழ்த்தும் அந்த வாழ்த்துகளும் ஆசியும் எவ்வளவு பணத்தை கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாது.

வாழ்த்து

----------------------------------------------
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அறந்தாங்கி ஈழத்தமிழர் முகாம் அளவில் முதலிடம் பெற்ற மாணவன் டிக்சன் (394) . 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதே முகாம் அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஷோபா (867). இருவரையும் அறந்தாங்கி ஈழத்தமிழர் முகாம் ஆசிரியர்களும், மாணவர்களும், பொதுமக்களும் வாழ்த்துகின்றார்கள். நாமும் வாழ்த்துவோம்.
----------------------------------------------------

வலி

---------------------
மு. கோமதி
பாப்பாந்தாங்கள்
----------------------

பிரிவின் வலி
பிரிந்தால்தான் புரியும்
இழப்பின் வலி
இழந்தால்தான் தெரியும்
எங்கள் வலி
அகதியாய் வாழ்ந்தால்
உங்களுக்குப் புரியும்

அகதி அகதி என்று
அழைக்கும்போது
கூட்டுக்குள் நத்தையாய்
எங்கள் மனம்
குறுகிப் போகிறது
நாங்கள் மனிதர்கள்
உங்களைப்போல்
எங்களுக்கும் வலிக்கும்.

--------------------------------

இளங்கவி ஈழபாரதியின் --- புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும்

நமது சமூகத்தின்
எதிர்காலத் தலைமுறை
பிறக்கும் முன்பே
அகதிப் பட்டம்

இது சவிதா அவர்களின் வரிகள் இக்கவிதையோடு முகாம்களில் நடக்கும் சம்பவங்களையும் உற்றுநோக்கும் போது சற்று தினங்களுக்கு முன்னால் என்னுடைய நண்பரின் மூன்று வயது குழந்தை இப்படிக கேட்டதாம். அப்பா நாம் அகதியா? அகதியென்றால் என்னப்பா? இக்குழந்தை இந்திய தேசத்தில் பிறந்தது. ஆனாலும் அடையாள அட்டையில் அகதியாய். இதில் சில நேரங்களில் திடீர் தனிக்கை(சோதனைகள்) நடைபெறும். அத்தருணங்களில் குழந்தைகள் தூங்கிக்கொண்டு இருந்தாலும் சரி, உடல் நலக்குறைவாக இருந்தாலும் சரி, கண்டிப்பாக குழந்தையை காட்டியே ஆகவேண்டும். காரணம் இக்குழந்தை இலங்கை அகதிக்கு பிறந்தது.
போர்க்கால சூழலின் காரணமாக இடம் பெயர்ந்தது தவறா? இல்லை இலங்கை அகதிக்கு குழந்தையாய் பிறந்தது தவறா?..... இதே உணர்வுகளின் வலிகளோடு கவிதை தந்து இருக்கிறார். கவிஞர் சு. சிவா அவர்கள் இப்படி

உணவுக்காக மட்டும்தான்
வாய் திறக்க வேண்டுமா
காகத்தின் கூட்டில்
குயில் குஞ்சு

குயில் குஞ்சு வாழ்வதென்னவோ காக்கையின் கூட்டில். கூடு கட்டவும் தெரியவில்லை காக்கையின் கூட்டில் நீண்ட நாட்கள் வாழ்வதும் இல்லை. எப்படி திறப்பது? குயில்களே முதலில் கூடுகளைக் கட்டுங்கள் முடிந்தவரை கட்ட பழகுங்கள் இனி காக்கைகளை எதிர்பார்க்கத் தேவையில்லை.

மனித வாழ்வில் உணவு, உடை, இருப்பிடம் போன்றவகைகள் அடிப்படைத் தேவைகளாய் வரையறுக்கப்பட்டுள்ளன. இதில் இவர்களுக்கு எல்லாமே கிடைப்பதில்லை. அடிப்படை வசதிகள் இன்னமும் பூர்த்தியாகாத நிலையிலேயே இருந்து வருகின்றது. என்றாலும் அரசின் தற்காலிக வீடுகள், அரசு மானிய அரிசி, அரசின் மாதம் ஒன்றுக்கு வழங்கப்படும் பணக்கொடை போன்றவைகளால்தான் இன்று சில வீடுகளில் அடுப்பு எரிக்கப்படுகின்றது. அகதிகளின் வறுமை நிலை குறித்து த. விஜயசாந்தி எழுதியிருக்கும் கவிதை இது.

“நாங்கள் வறுமைத் தோட்டத்தில்
பூத்துக் குலுங்கும் கண்ணீர்ப்ப+க்கள்
எங்கள் பசிக்கு பட்டினியே தீனி”!

எங்கள் படைப்பாளிகள் பூக்களைக் கூட கண்ணீர் சிந்திக்; கொண்டே தான் பார்க்கமுடிகிறது. ‘பசிக்கு பட்டினியே தீனி’ என்று அழுத்தமாய் பதிவு செய்து இருக்கிறார். எந்த நிலையிலும் எங்கள் மானத்தையும் கௌரவத்தையும் விட்டுக்கொடுத்து வி;;டமாட்டோம். பட்டினி இருந்து மடிந்தாலும் சரி. அகதி வாழ்கையுடன் இன்றைய ஈழத்து வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்கையில் அங்கும் இதைவிட வறுமைநிலை மேல் ஓங்கி இருக்கிறது. நித்தம் குண்டு சப்தம் தொடர்கிறது. வாழ்கையின் ஒவ்வாரு நொடியும் என்ன நடக்கும் என்று தெரியாமல் ஓடி ஒழிந்து கொண்டே இருக்கிறார்கள். என்ற நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது இக்கவிதை

அரை வயிறு பட்டினி
அணுகுண்டு சப்தம்
ஓடி ஒழியும் வாழ்க்கை
ஓயாதா அந்த வேட்கை

இடம்பெயர்வின் இடர்பாடுகள் எத்தகைய வலியைத் தந்தது. உணர்வுகளின் வலியை கண்முண்னே உறவுகளின் உயிர் பிரிந்த வலியை, நிலவின் பிடியில் கரை கடந்த நிலையை கரை பாடாத என்ற ஏக்கத்தில் கண்ட மணல் தீட்டுகளின் மகிழ்ச்சியை இது எல்லாவற்றையும் பதிவு செய்து இருக்கிறார் “வலி”யில் கவிஞர் அறிவுமதி.

“பிழைக்க வந்தவர்கள்
உணர்வார்களா
பிழைத்து
வந்தவர்களின் வலியை”
“மணல் திட்டுகளில்
மூச்சு வாங்கியவர்கள்
மனிதத்
திட்டுகளில்
பேச்சு வாங்குகின்றோம்.”

தொடர்வோம் வலிகளோடு

வாழ்த்து

-----------------------------
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வாழவந்தான் கோட்டை ஈழத்தமிழர் முகாம் அளவில் முதலிடம் பெற்ற மாணவி கிரிசாந்தினி (431), இரண்டாம் இடம் பெற்ற மாணவி நந்தினி (413) . 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வாழவந்தான் கோட்டை முகாம் அளவில் முதலிடம் பிடித்த மாணவி ரிஷாந்தினி (935). மூவரையும் வாழவந்தான் கோட்டை ஈழத்தமிழர் முகாம் பொதுமக்களும், சாரல் ஆசிரியர் குழுவும், மாணவர்களும் வாழ்த்துகின்றார்கள்.
------------------------------------------

சாளரம் துப்பியது அல்லது உனக்கும் நேர்ந்ததா?

-------------------------------
இயல்வாணன்
------------------------------
நான் தூஷிக்கப்பட்டேன்
மிகப்கொடிய வார்த்தைகளால்
நான் பயமுறுத்தப்பட்டேன்
பெயரறியாப் பிசாசுகளால்
நான் தாக்கப்பட்டேன்
இதயமற்றவர்களின்
இரும்புக் கம்பிகளால்
சிறைக் கதவுகள் திறக்கப்பட்டிருப்பது
எனக்காகவென்று
எச்சரிக்கப்பட்டேன் பலநூறு பேரால்
உனக்கும் இது நேர்ந்ததா?
நண்பனே?

எங்கள் தெருக்கள் வழிமறிக்கப்பட்டன.
எங்களுக்கு
நிர்வாணமாக வருவதே
புத்திசாலித்தனமென்று
சோதனைச் சாவடிகள்
ஆலோசனை சொல்லின.
மலங்கழிக்கவும் சலம் விடவும்
பற்றைகளை நாடுபவர்
கொல்லப்பட வேண்டிய கெரில்லாக்காரரென
சட்டவிதிகள் உருமாற்றின மனிதர்களை.
தெரு வீடு பாடசாலை அலுவலகம்
எங்காயினும்
மரணத்துக்கும் பிடிவிறாந்துக்கும்
அவசர அனுமதி தரப்பட்டது.
உன்னூரிலும் இது நடந்ததா
நண்பனே?

ஒரு துப்பாக்கியையோ
இரும்புக் கம்பியையோ
கனவு
திரும்பத் திரும்பத் திரையிடுகிறது.
தூக்கம் கெடும் போதெல்லாம்
சுற்றிலும்
பிசாசுகளின் அரவம் கேட்கிறது.

சூனியத்தில் சுழலும் மனது
திடீரெனப்
பரந்து வீரியம் கொள்கிறது.
எல்லாவற்றிலும் மோதி
எதிரொலிக்கும் உணர்வில்
குருதி
குதித்துப் புரள்கிறது.
உனக்கும் தோன்றியதா
இந்த உணர்வு?

நன்றி: 20-ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்.

------------------------------------------