Thursday, July 10, 2008

விளையாட்டு

```````````````````````````````````````````````````````
விடுதலை முகாமின் வீரச்சிறார்களே!
இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டின் ஒருநாள் கல்லூரி மாணவர்களின் கூட்டம் திருச்சி, வாழவந்தான் கோட்டை முகாமில் நடந்தது. பலவாறு விவாதித்தவர்களிடம் தன் நாடு பற்றிய புரிதல் எப்படி உள்ளதென நாடிபார்த்து உரையாடல் தொடர்ந்தேன். அமர்வு முடிந்து வெளியேறியபோது திருச்சி, கொட்டப்பட்டு முகாமின் மாணவர் தனியே கேட்டார். ‘இலங்கை துடுப்பாட்ட அணியை நாம் ஆதரிப்பது என்பது இலங்கையை ஆதரிப்பதற்கு சமம்தானே. இத்தனை ஆண்டின் வீர இழப்புகளும் இது போன்ற ஆதரிப்பினால் வேரிழந்து போகாதா?’.
மொழி, பண்பாடு, வணப்பு, தட்ப வெப்பம், இன உணர்வு, உணவு முறைகளைப் போலவே விளையாட்டுக்களும் இனத்திற்கு இனம் தனித்துவமாய் மிளிரக்கூடியவைகள். விளையாட்டுக்கள் ஒற்றுமையின் அடையாளம். ஒரு நாடு தன் தேசியத்தை வளர்த்தெடுக்கவும், ஒற்றுமையை உலகறியச் செய்யவும் உதவுபவை. மனவலி போக்குவதும், பக்குவப்படுத்துவதும், ஆரோக்கியம் தருவதும் விளையாட்டுக்கள்.
சாக்கு ஓட்டம், தவளைப் பாய்ச்சல், ஆடுபுலி ஆட்டம், கிட்டி அடித்தல், பல்லாங்;குழி என விதவிதமான விளையாட்டுக்களை ஆடிய அனுபவம் நமக்கும் உண்டு. துள்ளி வரும் காளை அடக்கி வீரம் மெய்ப்பித்தவர்கள் நாம். தனித்துவம் கொண்ட நம்நாட்டு கைப்பந்து முறையை அடுத்தடுத்த தலைமுறைக்கும் மடைமாற்றம் செய்து தொடர்ந்து ஒளிர்பவர்கள் நாம். உலகக்; கைப்பந்து முறைமைகளையும் கற்றுக்கொண்டு தடம்பதிப்பதிலும் சலைத்தவர்கள் அல்ல.
ஆனால் சிலகாலமாகவே, இறக்குமதியான துடுப்பாட்டத்தை மிகப்பலரும் உயிர்காக்கும் இரத்தமாக, நீராக, உணவாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். பள்ளி செல்பவர்கள்கூட சிந்தனை வளர்க்கும் நல் நூல்கள் படிக்கவும், தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும் நேரம் இல்லையெனச் சொல்லி துடுப்பாட்டம் காண்கிறார்கள். மட்டையும் பந்துமாக கறுத்துப்போகிறார்கள். ஆண்டில் பலநாட்கள் முடங்கிப்போகிறார்கள்.
ஈழத்தின் தேசிய விளையாட்டு (கிள்ளித்தட்டு) எது, எப்படி எனத்தெரியாது போட்டியில் கலந்துகொண்டு ஆட்டத்தின் இடையே அடிக்கும்போது ‘ஏம்பிள்ளை என்னை அடித்தாய்?’ என அறியாமை வெளிப்படுத்தியதும் நிகழ்ந்திருக்கிறது. (நாகரீகம் கருதி முகாம் பெயரைத் தவிர்க்கிறேன்).
நாம் நம் சுயத்தை இழந்தாலும, சுதந்திர மூச்சை புகைமேகங்கள் தடுக்கமுடியாதென தொடர்ந்து செயல்படும் நம் சொந்தங்களால் வண்ண வண்ண விளக்கிட்டு, சிட்டுக்களை ஆடவிட்டு, கோடிகளில் புரளும் வீரர்களைக் கொண்டு விளையாட்டுக்கள் நடத்தமுடியாதுதான். ஆடுகிறேன் ஆட்டமெனச் சொல்லி நாடுவிட்டு நாடு பறக்க முடியாதுதான். நரம்பெல்லாம் சுதந்திரமே ஓடும் போது தரணி புகழ எப்படி விளையாட்டு நடத்த முடியும். குடியுரிமையற்ற அகதிச் சூழலி;ல் நம்மால் மட்டும் முடியவாச் செய்கிறது. இருப்பினும் தமிழர்கள் நாங்கள் இனத்தாலும் மொழியாலும் ஒன்றிணைவோம் என முழக்கமிட்டு ஈழம்; விளையாட்டுக் கழகம் தொடங்கியுள்ளார்கள் நம்மவர்கள். முக்கிய சிறிய நிகழ்வுகள் பதிவு பெறாமல் போவதென்பது வரலாறு தோறும் நிகழும் வேளையில் நம் மக்கள் புலம்பெயர்ந்த பகுதிகளில் நடைபெறும் விளையாட்டுச் சாதனைகளை பதிவு செய்கிறார்கள் நம் இரத்தங்கள் என எண்ணும்போதே நெஞ்சம் நிறைகிறது.
மகிழ்ச்சியின், இணைவின், எழுச்சியின் அடையாளமாக மட்டுமல்ல விளையாட்டுக்களை எதிர்ப்பின் அடையாளமாக்க முடியும். நியாயங்கள் வேலியிடப்படும் போதும், சுதந்திரம் மறுக்கப்படும் போதும் ஒற்றுமை சொல்லும் விளையாட்டுக்களை எதிர்க்குரலாக்க முடியும். நிகழ்வெளியில் ஆதாரங்கள் நிறைந்து கிடக்கின்றன.
சீனாவிடமிருந்து தனிநாடு பெற்று சுயமாய் நிற்க அய்ம்பது ஆண்டுகளாக முயன்று வரும் திபெத் தன் முயற்சியை உலகத்தின் கவணத்தில் கொண்டுவர இந்த ஆண்டு (2008) சீனாவில் நிகழவிருக்கின்ற ஒலிம்பிக் போட்டிகளை எதிர்ப்பின் அடையாளமாக்கி இருக்கிறது. விளைவு, எங்கெல்லாம் ஒலிம்பிக் சுடர் வலம் வந்ததோ அங்கெல்லாம் அங்குள்ள திபெத்தியர்கள் தங்கள் எதிர்ப்பினை பதிவுசெய்திருக்கிறார்கள்.
1976-ம் ஆண்டின் உலக ஒலிம்பிக் போட்டியை தென்னாப்பிரிக்காவுடன் (கறுப்பர்கள்) இணைந்து நியூசிலாந்து (வெள்ளையர்கள்) நடத்தியதால் வெள்ளை இனவாத அரசியலுக்கு எதிராக 22 ஆப்பிரிக்க நாடுகள் உலக ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணித்து எதிர்ப்பு காட்டின. 1977-ல் கிலெனிசுல் என்ற இடத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
மொஸ்கோ, ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததை எதிர்த்து 1980-ல் மொஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணித்து எதிர்ப்பை பதிவுசெய்தது அமெரிக்கா (பின்னாளில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானையும் ஆக்கிமித்தது என்பதும் வரலாறு). குவைத்தை ஈராக் ஆக்கிரமித்ததால் 1990 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாட ஈராக்கிற்கு ஆசிய ஒலிம்பிக் குழு தடைவிதித்து தன் எதிர்ப்பை பதிவுசெய்தது.
ஒன்பதாவது உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் இலங்கை பங்கேற்றபோது ஒரு போட்டியின் நடுவே புலிக்கொடியை துக்கிக்கொண்டு ஓடினார் மயூரன். விசாரித்தபோது “ஈழத்தமிழர் பிரச்சனையை அனைத்துலக சமூகத்துக்கும் எடுத்துச் செல்லும் நோக்கத்துடனே நான் மைதானத்தின் உள்நுழைந்தேன்” என தன் எதிர்ப்பை பதிவுசெய்தார் நம் ஈழத்துக் குலக்கொழுந்து.
நியாயம் வேண்டுவோர், சுதந்திரமாய் நிற்க ஒரு பிடி மண் வேண்டுவோர், துடிப்போசை அடங்குமுன் குடிமகன் என்றொரு அங்கிகாரம் வேண்டுவோர், அடிமை பூமியையல்லாமல் சொந்த நாட்டை உரிமையாக கொடுத்துச்செல்ல நினைப்போர் எல்லோருக்குமே தங்கள் எதிர்ப்பினைப் பதிவுசெய்ய பரந்த ஊடகங்களும், திரண்ட மக்கள் கூட்டமும், அளப்பெரிய வாய்ப்புகளும் தேவைப்பட்டதில்லை.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், சிறு துறும்பும் பல் குத்த உதவும் என்ற பழமொழிக்கேற்ப கிடைத்த சின்னஞ்சிறிய வாய்ப்புகளையெல்லாம் எதிர்ப்பை பதிவுசெய்யும் ஆயுதமாக்கிக் கொண்டார்கள். திபெத்தியர்களும், ஆப்பிரிக்கர்களும், ஈழத்தமிழர்களும் மட்டுமல்லாமல் மானமும், அறச்சினமும்கொண்ட ஒவ்வொரு மக்களும், மக்களினமும் வாழ்ந்து சொன்ன பதில் இது.
மீண்டும் ஒருமுறை கொட்டப்பட்டு மாணவரின் கேள்வியை வாசியுங்கள். சிந்தியுங்கள். உங்கள் பதில் என்ன?. உங்கள் பதில் உங்களை வலுப்படுத்தட்டும். இரத்த நாளங்களில் இட்டுவையுங்கள் உயிரூட்டட்டும். சிறு பொறிதான் இருளை அகற்றும் மறந்துவிடாதீர்கள்.
தோழமையுடன்
அருட்சகோதரர் சூ. ம. செயசீலன்
இளங்கவி ஈழபாரதியின்
புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும்
``````````````````````````````````````````````````````
- 5 -
``````````````````````````````````````````````````````
எங்களின் தாய்மொழி
இனிய தமிழ்
இழப்புகளின் தாய்மொழி
இது மோமதியின் வரிகள் .சற்று ஆழ்ந்து படித்து பார்த்தோம் என்றால் இரு வேற்றுமையான கருத்துக்களை முன்வைத்து இருக்கிறார். தமிழ் மொழியை இனிய மொழியென்றும் முன்பு இழப்புகளின் மொழி என்றும் ஒரு முரண்பாட்டை முன் நிறுத்தி இருப்பதாக தோன்றும். ஆனால் இது முரண்பாடு அல்ல. முடிவு தெரியாத போராட்;டத்தின் தெறிப்பில் புலம்பெயர்வின் வலியால் வந்த வார்த்தை(வாழ்க்கை) இங்கு கவிதையாக உயிர் பெற்று இருக்கின்றது.
இன்று உலக நாடுகளில் 59 நாடுகளில் தமிழ்மொழி பேசப்பட்டு வருகின்றது. அதே வேளையில் இன்று உலக மொழிகளின் தரவரிசையில் 5ம் தரத்தில் தமிழ்மொழி உள்ளது. என்பது நமக்கு பெருமை தரக்கூடிய விடையமாக இருந்தாலும் ஜ.நா. வின் யுனெஸ்கோ நிறுவனம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட செம்மொழி என்று அறிவித்திருந்;த போதிலும் நடுவண்ணரசு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு தொண்மையான மொழி என்று அறிவித்து இருப்பது சிறுமைப் படுத்தும் விடையாகவே உள்ளது.

விலங்குகளும் பறவைகளும் பாதுகாக்கப்பட்டு வரும் சமயத்தில் ஆறறிவு படைத்த மனித வாழ்க்கை மட்டும் கேள்விக்குறியாக இருக்கின்றது. இன்றுவரை உலகளாவிய ரீதியில் 27 மில்லியன் மக்கள் வெளிநாடுகளில் அகதிகளாகவும் 13 மில்லியன் மக்கள் சொந்த நாடுகளில் அகதிகளாகவும் உள்ளனர். 1983க்கு முன்னர் சுமார் 2 இலட்சம் பேர் இந்தியாவில் இலங்கை நாட்டவர்கள் புலம்பெயர்ந்து இருக்கின்றார்கள்.

மனித வாழ்வின் இன்றைய நிலைப்பாட்டை பதிவு செய்துஇருக்கிறார் ‘இன்றைக்கு உயிரோடிருக்கிறேன்’ மூலம் கவிஞர் அருணா சுந்தரராசன்.

தோட்டத்திலிருந்து
வீடு திரும்பியிருந்தன
கால்நடைகள்
இரை உலா முடித்து
கூடு திரும்பியிருந்தன பறவைகள்
பள்ளிக்கூடம் சென்றிருந்த
அக்கா மட்டும்
வீடு திரும்பவேயில்லை.


எல்லாமே வீடு திரும்பியிருந்தன அக்கவைத் தவிர. இந்த உறவுகளின் தவிப்பு இன்று நேற்று அல்ல கடந்த இருபத்தைந்து(25) வருடங்களாக எத்தனை உறவுகளை இழந்தோம்? எங்கு வாழ்க்கையைத் தொலைத்தோம்? தெரியவில்லை. அக்கா வீடு திரும்ப வில்லை என்றால் என்ன ஆனது என்றும் தெரியவில்லை. விடுதலை போராட்டத்தில் தன்னையும் சக போராளியாக இணைத்து இருக்கலாம். பரவாயில்லை ஆனால் அவளை கடத்தியும் இருக்கலாம், கற்பழித்தும் இருக்கலாம், கொலைகூட செய்து இருக்கலாம்.

இது தினந்தோறும் நடக்கும் விடையமாக மாறிவிட்டது. மனித உரிமைகளை மீட்டு எடுக்கின்ற ‘மனித உரிமை கழகம்’ உலக நாடுகளுக்கான ஜ.நா. சபை போன்ற நடுநிலை அமைப்புகள் சர்வேதேச அழுத்தங்கள் கொடுத்த போதிலும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
இதற்கு எல்லாம் முடிவு என்ன? என்ற கேள்விக்கு கவிஞர் இவ்வாறாக பதிவு செய்து இருக்கிறார்.

காடுகளின்
வரலாறு என்பது மாறி
வரலாறுகள் காடுகளில்
பதிவு செய்யப்பட்டுக்
கொண்டிருக்கின்றன.


இதே அழுத்தத்தோடும் உணர்வுகளின் வெளிப்பாடாக கவிஞர் சு,சிவா அவர்களின் ஆழ்மனதில்; இருந்து வெடித்து சிதறிய துளிகள் இப்படியாக கண்ணீரும் இரத்தமும்

என் கவிதைகள்
கண்ணீரில்
முத்துக்கோர்க்கும்; முயற்சியல்ல
கண்ணீரை
இரத்தமாக்கும் முயற்சி


கவிதை என்பது அழகியல் மட்டும் அல்ல காதலின் வெளிப்பாடுகளில் வரும் மாயத் தோற்;றமும் அல்ல மனித வாழ்வின் உணர்வின் வெளிப்பாடு உயிரின் ஓசை வாழ்வின் வலியே கவிதை அப்படிப்பட்ட கவிதையே கவிதை.

வலிமை பெற.........
``````````````````````````````````````````````````````

ரிஷி
வாழவந்தான் கோட்டை

``````````````````````````````````````````````````````

சுதந்திர தேசத்தில்
சுகமாக வாழவந்த
சாமந்தி - பூவே

வா
நாம் இருவரும்
சேர்ந்தே போவோம்
புதுயுகம் படைப்பதற்கு!

சுதந்திர தேசத்தில்
சூரியனை எதிர்த்த - நீ
அன்னியனை
விரட்டிட......
புயலாக புறப்படு
விடியலைத் தேடி.......

விடியும்!
என்றோ ஒருநாள்
அன்றே
நம் திருநாள்
உதயமாகட்டும்
அதுவரை
காத்திருப்போம்...
சுகமாக வாழவந்த
சுதந்திர தேசத்தில்............?
தடைகளை உடைத்து விளையாடு
``````````````````````````````````````````````````````
ஈழத்துச் செல்வன் இரா. லிங்கேஷ்
வாழவந்தான் கோட்டை
``````````````````````````````````````````````````````
எல்லையில் இரு மாகணம்
ஏழ்மையில் எட்டு மாவட்டம்
எத்தனை திறமை இருந்தும்
ஏற்க மறுக்கும் அரசாங்கம்
செத்துப் போகப் பிறந்த
சில்லறைத் தமிழனுக்கு
சிட்ணியில் என்ன ஒலிம்பிக்
எண்ணும் ஏழனம்

பட்டெண அங்கு சுற்றி வளைப்பு
பந்து விளையாடும் சிறுவன்
பயங்கரவாதி என்று சிறைபிடிப்பு

பாடசாலை மணி ஓசை
பதிலாக காலையில்
வெடி ஒசை

கட்டம் கட்டமாய் கிளிதட்டு
எம் கடக்கரை மணல் விளையாட்டு
கதிரவன் மறையும் நேரம்
கம்பிக் கூட்டில் சிறைவாசம்

பட்டது போதும்
பொங்கி எழு
பயம் இனி இல்லையென்று
ஆணையிடு
சட்டம் இட்ட சாதி வெறியர் முன்
சரித்திரம் படைக்கப் புறப்படு

கொட்டும் மழையில்
குமிழி போல் அலைந்தாலும்
குறுகிய காலத்தில்
விடுதலை காண
கண் கெடுக்கும் கயவர் முன்
களத்தில் இறங்கி விளையாடு

பேரினவாதம் காட்டும் ராஜங்கம்
பிடியில் இருந்து நம்மைக் காக்க
தலைகள் சில நேரம் சாயலாம்
தமிழினம் சாயாது என்ற
தங்கத் தலைவன் பாதையில்
தடைகள் உடைத்து விளையாடு.
புவனேசுவரன்
நாரணம்மாள்புரம்



மகள் யாழ்ப்பாணத்தில்
மனைவி கொழும்பில்
தந்தையோ வன்னியில்
நோயுற்ற தாய் தமிழகத்தில்
உறவினர் ஜெர்மனியில்
பாலை நிலத்தில்
அலைக்கழிக்கப்படும்
ஒட்டகம் போல்
நான் ஒவ்வொரு நாளும்
ஒரு நாட்டில்
குரங்கிடம் அகப்பட்ட
பஞ்சடைத்த தலையணையாய்
எங்கள் குடும்பம்.
கனவாகும் வாழ்க்கை

ஏ. கௌரி
நாட்டரசன் கோட்டை

என் வேதனையை
வெத்துப் பேப்பரில்
விளக்கிச் செல்லலாம்
பேனாவை எடுத்தால்
வெட வெடக்கிறது கை

கண்ணீரை மையாக்கி
கவிதை எழுதும்
சிறகொடிந்த பறவை நான்
கண்களை மூடினால்
கனவிலும் அலறல் சத்தம்
உணவிலும் கண்ணீர் வாசம்

வன்முறை களத்தில்
வாழும் எம்மக்கள்
வாழ்க்கை விடியாதா?
மரண யுத்தத்திலிருந்து
மனிதம் விடுபட்டு
சமாதானம் பிறக்காதா?

புலம்பெயர்ந்த வாழ்வு
புரியாத புதிராய்
பதினெழு வருடங்களாய்
பாதை தெரியா வாழ்க்கை
எங்கே போகிறோம்
எதற்காய் வாழ்கிறேம்
எதுவும் புரியவில்லை
அடுத்த தலைமுறையாவது
அகதிப்பட்டம் தவிர்க்குமா?

மண்ணின் மைந்தராய் விளையாடு

ஈழக்கவிதாசன் மா.ஞானசூரி
அறந்தாங்கி.


விளையாடு விளையாடு -வியர்வை
வழிந்தோட விளையாடு - மூச்சு
சீராக விளையாடு!
உடலும் மனமும் - உறுதி
பெற்றிட விளையாடு !
மைதானம் சென்று - மண்ணின்
மைந்தராய் விளையாடு!

குளிர்சாதன அறைக்குள்
வியர்வை சுரக்காத - கணினி
விளையாட்டு வேண்டாமே!
நாகரீகமென மயங்காதே ........
நாணயங்களை இழக்காதே.....

விளையாடு விளையாடு
உடலும் மனதும்
உறுதி பெற்றிட - மண்ணின்
மைந்தராய் விளையாடு.



------------------------------------------------------------------

விளையாட வழி செய்வோம்

மரிய செல்வி 8-ஆம் வகுப்பு
வாழவந்தான் கோட்டை

விளையாட்டின் விந்தையில்
வியந்தோம் குழந்தைகள்
விளையாட்டை விளையாட
வீதிக்கு வந்தோம்
எங்கள் நிலை
விளையாட்டை தடுத்தது

பறவையின் முறிந்த சிறகாய்
எங்கள் வாழ்க்கை நிலை
விளையாட்டை முறித்தது
வளரும் செடியை
கிள்ளி எறிந்தது போல்
மனதில் உள்ள
விளையாட்டை கிள்ளி எரிந்தனர்.

மனதிற்குள் விளையாட்டை
விளையாட நினைத்தோம்
மனதில் நினைத்தது
நினைத்தது தானா
இல்லை
நினைத்தது நிறைவேரும் நாள்வருமா?

கூடி வாழும்
குழந்தைகளாய் நின்று
ஒற்றுமையைக் கற்று
ஒன்றாய் நின்று
பின்நாளில்
எங்கள் தங்கைகள்
இனிதாய் விளையாட
வழி செய்வோம் நாங்கள்.

பிழைக்க வந்துள்ளேன்

````````````````````````````````````````````````````````
ம.சி. தமிழினி 12 வகுப்பு
வெல்கம் காலனி. சென்னை -101
````````````````````````````````````````````````````````

கண்விழித்துக் கண்ணாடியில்
என்னைக் கண்டதும்
ஒரு பெருமூச்சு
அங்கு மரங்களில் பூக்கள் இல்லை
வீதிகளில் மனிதரில்லை
இரண்டுமே கல்லறைகளில்

கட்சிக் கொடிகளுக்குள்
சிக்கிச் சின்னாபின்னமான
இந்த வாழ்க்கையை சுமந்துகொண்டு
எவ்வளவு தூரம் தான் நகர்வது?

இரத்த வாடையை தொடர்ந்து
நுகர மறுக்கும் இந்த வாழ்க்கையையும்
என் கடமைகளையும்
கடல்கடந்து கூட்டிவருவதை விட
வேறு வழி தெரியவில்லை
உயிரை எடுத்துக்கொண்டு
ஓடி வந்து விட்டேன்
உரிமையை அநாதையாக்கிவிட்டு

வணிகக்காரர்கள் தான் பாவம்
அவர்கள் வரவுசெலவில்
என்னை அறவிடமுடியாக் கணக்கில்
பதிந்திருப்பார்கள்.

நாவலர் மன்றம்

````````````````````````````````````````````````````````
சூ. ம. செ
````````````````````````````````````````````````````````
( நாவலர் உள்ளே வருகின்றார்......)
மாணவர்கள் : வணக்கம் நாவலரே!
நாவலர் : நம் ஈழநாட்டின் தேசிய மலரான கார்த்திகா மலர்போல் முகமலர்ச்சியுடன் உள்ள என் இனிய மாணவர்களே வணக்கம்.
மார்க்சிம்: நாவலரே இன்று ஆரம்பமே படு ஜோரா இருக்கு.
யாழினி: நம்மைப் பார்த்தாலே நாவலருக்கு கவிதை சுரக்குது. அப்படித்தானே நாவலரே.
நாவலர்: ஓம். சரி, இந்த மாத எழுத்தாளர் பேராசிரியர் ‘ நந்தி’ அவர்களைப் பற்றி பேச இருக்கிறோம். யாராவது தகவல் சேகரித்துட்டு வந்திருக்கிறீங்களா?.
கனிமொழி : ஓம் நாவலரே. மூத்த எழுத்தாளரான நந்தி அவர்களின் இயற்பெயர் செ.சிவஞானசுந்தரம். நந்தி அவர்கள் 1928 ம் ஆண்டு மார்ச் 30ம் திகதி பிறந்தார்.
நாவலர்: மிகச்சரியாகச் சொன்னீங்க. பெரும்பாலும் சிறப்படைந்த எழுத்தாளர்களுடைய பின்னணிகள் நமக்குக் கிடைப்பதில்லை. ஆனால் நந்தி அவர்களுடையப் பின்னணி நமக்குக் கொஞசம் கிடைத்துள்ளது.
கார்க்கி: அப்படியா! சொல்லுங்க நாவலரே.
நாவலர்: ஓம். தமிழும் இலக்கியமும் நந்தி அவர்களின் இரத்தத்தில் கலந்தஒன்று. தாய் வழிப்பாட்டன் தமிழிலக்கிய அறிஞராகவும், பகுத்தறிவு வாதியாகவும் விளங்கியிருக்கார். மறைந்த பேராசிரியர் வி. செல்வநாயகம் இவரது சிறிய தகப்பனார். அதனால தமிழும், இலக்கிய உணர்வும் இளம் வயதிலேயே இவரை ஆட்கொண்டுவிட்டது.இளவழகி: அப்படின்னா, நந்தி அவர்கள் சிறந்த பேராசிரியராக இருந்திருப்பாங்களே.....
நாவலர் : பேராசிரியர்தான். ஆனால் தமிழிலக்கிய பேராசிரியர் அல்ல. இலக்கியத்தின் மேல் ஈர்ப்புக் கொண்டிருந்தாலும் நந்தி அவர்கள் மருத்துவ நிபுணராகத்தான் பணியாற்றினார் அதனால பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், மருத்துவப்பீடத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். உலக சுகாதார மையத்தின் சார்பில் பல நாடுகளுக்கும் சென்று பயிற்சிப் பட்டறைகளும் நடத்தியுள்ளார்.
பனிமலர்: மருத்துவத்துறையிலயும், இலக்கியத்துறையிலயும் ஆர்வத்தோடு செயல்பட்ட நந்தி அவர்களின் முதல் படைப்பு எப்போது வந்தது நாவலரே.
நாவலர் : 1947ல் பட்டப்படிப்பு முன்னிலைக்கல்வி படித்துக்கொண்டிருந்தபோதுதான் பத்திரிகைகளில் எழுதத் துவங்கினார். இவரது முதல் சிறுகதையான ‘சஞ்சலமும் சந்தேகமும்’ 1947ல் வீரகேசரியில் வெளிவந்தது.
திலீபன் : கிராமச் சூழமைவில் வாழ்ந்த நந்தி அவர்கள்,தொழில் காரணமாக சிங்களவர்கள் மற்றும் மலையகத் தமிழ் மக்கள் மத்தியிலும் பணிசெய்து வாழ்ந்ததாகக் கேள்விப்பட்டேன் உண்மையா நாவலரே?.
நாவலர் : உண்மைதான். இப்படிப்பட்டச் சூழமைவுகளில் வாழ்ந்ததால்தான் நந்தியின் படைப்புக்களில் உண்மையும், நேர்மையும், மனிதநேயமும் மிளிர்வதைக் காண முடிகிறது.
கனிமொழி: மக்களின் உணர்வுகளை மையப்படுத்தித்தான் எழுதினாங்களா! கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. நந்தி அவர்களின் படைப்புகளைப் பற்றியும் சொல்லுங்க நாவலரே.
நாவலர்: நந்தி அவர்கள் இதுவரை எண்பதுக்கும் அதிகமான சிறுகதைகளை எழுதியுள்ளார்.அவைகள்; ‘ஊர் நம்புமா?’, கண்களுக்கு அப்பால்’, ‘நதியின் கதைகள்’, ‘தரிசனம்’ என நான்கு தொகுதிகளாக வெளிவந்துள்ளது. மேலும்; ‘மலைக்கொழுந்து’, ‘தங்கச்சியம்மா’, ‘நம்பிக்கைகள்’ என்ற தலைபுகளில் இவரது நாவல்களும் வெளிவந்துள்ளது.
பூவிழியாள்: மருத்துவப் பேராசிரியராக இருந்ததுனால அவை சம்பந்தமாகவும் புத்தகங்கள் எழுதியிருப்பாங்களே....
நாவலர் : ஓம். ‘அருமைத் தங்கைக்கு’, ‘அன்புள்ள நந்தினி’, ‘நந்தினி உன் பிள்ளை’இ ‘உங்களைப் பற்றி’, போன்ற மருத்துவ நூல்களை எழுதியுளார். அவைகள் பெண்களுக்கும், மருத்துவம் கற்றுக்கொடுக்கும் போராசிரியருக்கும் கையேடுகளாக விளங்குகின்றன.
பனிமலர் : 1947 ல் எழுத ஆரம்பித்த நந்தி அவர்களுக்கு மணிவிழாக்காலம் கடந்திருச்சு இதைஒட்டி ஏதாவது சிறப்பு நிகழ்வுகள் நிகழ்ந்ததா நாவலரே?நாவலர் : ஓம். நந்தி அவர்களின் இலக்கிய நுழைவின் மணிவிழாவினை முன்னிட்டு “நந்தியின் சிறுகதைகள்” என்ற நூலை அவரது நண்பர்கள் வெளியிட்டுள்ளார்கள். என். சோமகாந்தன் என்ற எழுத்தாளர் “ நந்தி-நோக்குகள் இருபத்தைந்து” என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
யாழினி: நாவலரே நம்ம நூலகத்தில் என். சோமகாந்தன் அவர்களின் நூல் இருக்கிறது. அதில் கட்டுரை எழுதியுள்ள பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் “ஈழத்தின் நவீன இலக்கிய வரலாற்றில் நந்தி எனும் எழுத்தாளனுக்கு ஒரு மதிப்பார்ந்த இடம் உண்டு. நந்தியின் ஆக்கங்கள் இல்லாத ஈழத்துத் தமிழ் நாவலும் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையும் நிச்சயமாக வளக்குறைபாடு உடையதாகவே இருக்கும்”என எழுதியுள்ளார்.
நாவலர்: மகிழ்ச்சி. சரி அடுத்தமாத நாவலர் மன்றத்தில் எழுத்தாளர் கே.கணேஷ் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். நன்றி.
மாணவர்கள் : நன்றி நாவலரே.
மாணவச் செல்லங்களே எழுத்தாளர் கே.கணேஷ் அவர்களைப்பற்றிய தகவல்களைச் சேகரித்து நாவலர் மன்றத்திற்கு அனுப்புங்கள்.