Friday, June 13, 2008

இளங்கவி ஈழபாரதியின் --- புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும்

நமது சமூகத்தின்
எதிர்காலத் தலைமுறை
பிறக்கும் முன்பே
அகதிப் பட்டம்

இது சவிதா அவர்களின் வரிகள் இக்கவிதையோடு முகாம்களில் நடக்கும் சம்பவங்களையும் உற்றுநோக்கும் போது சற்று தினங்களுக்கு முன்னால் என்னுடைய நண்பரின் மூன்று வயது குழந்தை இப்படிக கேட்டதாம். அப்பா நாம் அகதியா? அகதியென்றால் என்னப்பா? இக்குழந்தை இந்திய தேசத்தில் பிறந்தது. ஆனாலும் அடையாள அட்டையில் அகதியாய். இதில் சில நேரங்களில் திடீர் தனிக்கை(சோதனைகள்) நடைபெறும். அத்தருணங்களில் குழந்தைகள் தூங்கிக்கொண்டு இருந்தாலும் சரி, உடல் நலக்குறைவாக இருந்தாலும் சரி, கண்டிப்பாக குழந்தையை காட்டியே ஆகவேண்டும். காரணம் இக்குழந்தை இலங்கை அகதிக்கு பிறந்தது.
போர்க்கால சூழலின் காரணமாக இடம் பெயர்ந்தது தவறா? இல்லை இலங்கை அகதிக்கு குழந்தையாய் பிறந்தது தவறா?..... இதே உணர்வுகளின் வலிகளோடு கவிதை தந்து இருக்கிறார். கவிஞர் சு. சிவா அவர்கள் இப்படி

உணவுக்காக மட்டும்தான்
வாய் திறக்க வேண்டுமா
காகத்தின் கூட்டில்
குயில் குஞ்சு

குயில் குஞ்சு வாழ்வதென்னவோ காக்கையின் கூட்டில். கூடு கட்டவும் தெரியவில்லை காக்கையின் கூட்டில் நீண்ட நாட்கள் வாழ்வதும் இல்லை. எப்படி திறப்பது? குயில்களே முதலில் கூடுகளைக் கட்டுங்கள் முடிந்தவரை கட்ட பழகுங்கள் இனி காக்கைகளை எதிர்பார்க்கத் தேவையில்லை.

மனித வாழ்வில் உணவு, உடை, இருப்பிடம் போன்றவகைகள் அடிப்படைத் தேவைகளாய் வரையறுக்கப்பட்டுள்ளன. இதில் இவர்களுக்கு எல்லாமே கிடைப்பதில்லை. அடிப்படை வசதிகள் இன்னமும் பூர்த்தியாகாத நிலையிலேயே இருந்து வருகின்றது. என்றாலும் அரசின் தற்காலிக வீடுகள், அரசு மானிய அரிசி, அரசின் மாதம் ஒன்றுக்கு வழங்கப்படும் பணக்கொடை போன்றவைகளால்தான் இன்று சில வீடுகளில் அடுப்பு எரிக்கப்படுகின்றது. அகதிகளின் வறுமை நிலை குறித்து த. விஜயசாந்தி எழுதியிருக்கும் கவிதை இது.

“நாங்கள் வறுமைத் தோட்டத்தில்
பூத்துக் குலுங்கும் கண்ணீர்ப்ப+க்கள்
எங்கள் பசிக்கு பட்டினியே தீனி”!

எங்கள் படைப்பாளிகள் பூக்களைக் கூட கண்ணீர் சிந்திக்; கொண்டே தான் பார்க்கமுடிகிறது. ‘பசிக்கு பட்டினியே தீனி’ என்று அழுத்தமாய் பதிவு செய்து இருக்கிறார். எந்த நிலையிலும் எங்கள் மானத்தையும் கௌரவத்தையும் விட்டுக்கொடுத்து வி;;டமாட்டோம். பட்டினி இருந்து மடிந்தாலும் சரி. அகதி வாழ்கையுடன் இன்றைய ஈழத்து வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்கையில் அங்கும் இதைவிட வறுமைநிலை மேல் ஓங்கி இருக்கிறது. நித்தம் குண்டு சப்தம் தொடர்கிறது. வாழ்கையின் ஒவ்வாரு நொடியும் என்ன நடக்கும் என்று தெரியாமல் ஓடி ஒழிந்து கொண்டே இருக்கிறார்கள். என்ற நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது இக்கவிதை

அரை வயிறு பட்டினி
அணுகுண்டு சப்தம்
ஓடி ஒழியும் வாழ்க்கை
ஓயாதா அந்த வேட்கை

இடம்பெயர்வின் இடர்பாடுகள் எத்தகைய வலியைத் தந்தது. உணர்வுகளின் வலியை கண்முண்னே உறவுகளின் உயிர் பிரிந்த வலியை, நிலவின் பிடியில் கரை கடந்த நிலையை கரை பாடாத என்ற ஏக்கத்தில் கண்ட மணல் தீட்டுகளின் மகிழ்ச்சியை இது எல்லாவற்றையும் பதிவு செய்து இருக்கிறார் “வலி”யில் கவிஞர் அறிவுமதி.

“பிழைக்க வந்தவர்கள்
உணர்வார்களா
பிழைத்து
வந்தவர்களின் வலியை”
“மணல் திட்டுகளில்
மூச்சு வாங்கியவர்கள்
மனிதத்
திட்டுகளில்
பேச்சு வாங்குகின்றோம்.”

தொடர்வோம் வலிகளோடு

No comments: