Tuesday, August 19, 2008


விடுதலை முகாமின் வீரச்சிறார்களே!
விழாக்கள், உறவுகள் கூட்டி உணர்வுகள் கூட்டும், நினைவில் நிற்கும் நிகழ்வுகள் சொல்லும். நிகழ்வுகள் படைக்கும் உன்னத நினைவுகள் உள்ளத்திரையில் பசுமை போர்த்தும், முகம் பார்த்து புன்னகை செய்யும். உன்னத நிகழ்வு உரிமைக்கானதென்றால் உணரும் போதெல்லாம் நரம்புகள் இறுகும், இரத்தப் பயணம் சீர்நிலை கடக்கும், செயல்முனை நோக்கி பாதங்கள் விரையும்.
அகதிப் பட்டறையில் சீரின்றி முடங்கிக்கிடக்கும் நமக்கு இது ‘வெள்ளி விழா” காலம். ஆம், “சிறகொன்று முளைத்து விதையொன்று அலையும் முளைக்க ஒருபிடி மண்தேடி” (இன்குலாப்) என உரிமை மண் விட்டு பிய்த்தெறியப்பட்ட பஞ்சுகளாய் கனடா, ஆஸ்திரேலியா, நார்வே, இந்தியா, செர்மனி, மாஸ்கோ போன்ற தேசங்களில் அகதிகளாய் கரை ஒதுங்க ஆரம்பித்து இது இருபத்தைந்தாம் ஆண்டு, ‘வெள்ளி விழா’.
‘வெள்ளிவிழா’ ஆண்டிலும் அகதியான காரணம் தெரியாது, புரியாது வாழும் பெரியோரும், கல்லூரிப் பேரவையினரும் வாழ்ந்து வருகிறார்கள் என்பது தவிர்க்க இயலாத உண்மை.
இலங்கையின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் சிங்களவர்களும், பூர்வீகத் தமிழர்களும் மட்டும் பொறுப்பல்ல. மலையகத் தமிழர்களின் பங்கும் அளப்பெரியது. 1820 ஆம் ஆண்டு கம்பளையிலிருந்து சில மைல்களுக்கு அப்பாலிருந்த சீனாப்பட்டி என்ற ஊரில் காப்பிப் பயிர் செய்து அதிக லாபம் கண்ட ஜார்ஜ் போர்ட் என்ற வெள்ளைக்காரருக்குப் பிறகு தொடர்ச்சியாக காப்பிப் பயிர் செய்ய விரும்பிய வெள்ளையர்களால் 1823 முதல் 1839 வரை மொத்தம் மொத்தமாக ஒப்பந்தக் கூலிகளாக கொண்டுவரப்பட்ட இந்தியத் தமிழர்களே மலையகத் தமிழர்கள்.
கடினமாய் உழைத்து, தம்மையும் நாட்டையும் வளர்த்த மலையகத் தமிழர்களின் உரிமையை, 1948 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 15 ஆம் திகதி இந்தியா- பாக்கிஸ்தான் குடி உரிமைச் சட்டம் இயற்றியதன் வழியாக பறித்து வீர வேகத்தை துவக்கிவைத்தார்கள் ஆட்சியாளர்கள்.
1956,சூன் திங்கள் 05 ஆம் திகதி தமிழ் இல்லாத .........மொழி மட்டுமே ஆட்சி மொழி என சட்டம் இயற்றி தமிழ் மொழியின் உரிமை பறித்தார்கள். நடத்தப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்தில் நம்மவர்களை கொடுமையாகத் தாக்கினார்கள்.
வாகனங்களின் இலக்கத் தகடுகளில் உள்ள இலக்கங்களுடன் சிங்கள சிறி எழுத்தை இணைக்கும் மோட்டார் வண்டிப் பதிவுச் சட்டம் கொண்டுவந்து மீண்டும் தமிழை பின்னுக்குத் தள்ளினார்கள். 1958 ஆம் ஆண்டு பெரிய அளவில் நடந்த மொழியுரிமைப் போராட்டமும் அதில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளும் வரலாறாகியுள்ளன.
மக்கள் தொகையில் சிறுபான்மையினராக இருந்தாலும் கல்வியில் முன்னிலையில் தேர்ச்சி பெற்று பல முக்கியப் பொறுப்புக்களில் தமிழர்கள் சிறப்பாக கடமையாற்றி வந்தவேளையில், 1970 ஆம் ஆண்டு கல்வி அமைச்சராக இருந்த பதியுதீன் முகமது அவர்கள் “தரப்படுத்தல்” என்ற சட்டம் கொண்டு வந்தார். அதாவது, ஒரே நாடான இலங்கையில் அதுவரை கல்வியறிவாற்றலில் சிறந்து விளங்கும் அனைவருக்கும் பணியிடம் என்றிருந்த நிலையை மாற்றி, விகிதாச்சார அடிப்படையில்; பணியிடம் வழங்கப்படும் என சட்டம் இயற்றினார். தமிழர்கள் சிறுபான்மையினர் என்பதால் தமிழருக்கு குறைந்த அளவு விகிதாச்சாரமே தரப்பட்டது. விளைவு, நன்கு படித்து முன்னிலை பெற்றாலும், நமக்கான விகிதாச்சாரம் குறைவானதால் பணியிட இழப்பு உறுதி செய்யப்பட்டது. கற்றறிந்தும் கடையர்களாக்கப்பட்டார்கள். வளரும் தமிழர்கள் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டார்கள்.; நம் முகாமின் இளைய தலைமுறையினர்போல் இல்லாது, நம்நாட்டு மூத்த இளையத் தலைமுறையினர் திறமைக்கு மதிப்பில்லையே என வேகம்கொண்டு ‘தமிழ் மாணவர் பேரவை’ ஆரம்பித்து சத்தியாக்கிரக வழியில் உரிமை வேண்டினார்கள். பிற்காலத்தில் தமிழ் இளைஞர் பேரவை ஆரம்பித்து போராடினார்கள்.
தமிழ்மொழியும், வேலைவாய்ப்புக்களும் கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்குத் தள்ளப்பட்டச் சூழலில் 1972 ஆம் ஆண்டு மே திங்கள் 22 அன்று இயற்றப்பட்ட புதிய குடியரசு அரசியலமைப்புச் சட்டம் முதல் குடிமக்களாகிய நம்மை இரண்டாம் தர குடிமக்களாக்கியது. ஒரு மதம் மட்டுமே ஆட்சி மதமென்றும் இந்து, கிறித்தவம், இசுலாம் அடுத்தநிலை மதமென்றும் சட்டம் சொன்னது. முந்தைய அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்த உரிமைகளும் புதிய சட்டஅமைப்பில் பறிக்கப்பட்டன.
03.01.1974 முதல் 10.01.1974 வரை யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவு நாளான 10.01.1974 அன்று தமிழறிஞர்களும், தமிழார்வளர்களும் கொடுமையாய்த் தாக்கப்பட்டார்கள். ஒன்பது தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.
மொழி உரிமை, வாழ்வுரிமை, மத உரிமை அனைத்தும் இழந்த பிறகு இழப்பதற்கு வேறென்ன இருக்கிறது என சிந்தித்த இளம் மாணவர்களும், மாணவிகளும், அலுவலகங்களில் கடமையாற்றினவர்களும், அரசியலில் இருந்த சில நல்;ல தமிழ் தலைவர்களும் பலவாறு இணைந்து சத்தியாக்கிரக வழியி;ல் போராடினார்கள். போராட்டம் ஒடுக்கப்பட்டதால் வேதனையின் விளிம்பில் நின்றவர்கள், தாங்கள் அனுபவித்த உரிமையை அடுத்தடுத்தத் தலைமுறைக்கும் விட்டுச்செல்ல நினைத்தவர்கள் ஆங்காங்கே இணைந்தார்கள். ஒரே இலக்கினை நோக்கி, தமக்கான போராட்ட முறையைத் தாங்களே தேர்வு செய்தார்கள்.
வேகமும் விவேகமும் சமதளம் கொள்ளும் வரை இழப்புக்கள் அனைத்துப் பிரிவினருக்குமாக இருந்தது. இதில் புரட்சியாளர்கள், ஆதரவாளர்கள், எதிராளர்கள் என எந்த வேறுபாடும் இல்லை. 2008 சூன் 16 இல் செய்தியாளர் மயூரன் கொடுத்தத் தகவலின்படி தாயக விடுதலைக்காக 1982 நவம்பர் 27 முதல் 2008 மே வரை 21,051 பேர் ‘வீர மரணம்” அடைந்திருக்கிறார்கள் இவர்களில் ஆண்கள் 16,516 பெண்கள் 4,535. இது ஒரு பிரிவின் செய்தி மட்டுமே. இதேபோல் காணாமல் போயுள்ளோரும் அதிகம்பேர் இருக்கிறார்கள். 15.08.2007 அன்று அனைத்துலக மன்னிப்புச் சபை தந்துள்ள தகவலின்படி கடந்த முப்பது ஆண்டுகளில் 5,700க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளார்கள். (பதியப்படாதவர்களின் எண்ணிக்கை எவ்வளவோ!).
போராட்டம் உக்கிரம் அடைந்த வேளையில் முடிந்த மட்டும் தாக்குப்பிடித்து இருந்துவிட்டு என் வீட்டிலும் “ஓர் உரிமை விரும்பி” என பெருமையாய் ஒரு மகனையாவது கொடுத்துவிட்டு இடம்பெயர்ந்தவர்கள் இன்று அகதிகளாய் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். தமிழ் நாட்டில் மட்டும் உள்ள 116 முகாம்களில், எழுபத்தைந்தாயிரத்திற்கு அதிகமானோரும், உலகளவில் பதினைந்து இலட்சத்திற்கும் அதிகமானோரும் அகதிகளாக இருக்கின்றார்க்ள்.
இச் சூழலில், எப்படி அகதியாக்கப்பட்டோம் என தன் பிள்ளைக்குச் சொல்லும் பெற்றோர் மண்ணுக்கு மேல் அரிதாகவே இருக்கிறார்கள். 2007 டிசம்பர் 08 அன்று முன்னாள் மறுவாழ்வுத்துறை ஆணையர் திரு. கற்பூர சுந்தரபாண்டியன் அவர்கள் ஆயத்த ஆடை உற்பத்தி மையம் ஆரம்பம் மற்றும் தையல் இயந்திரம் வழங்கும் விழாவிற்காக முகாமிற்கு வந்திருநதபோது, நீங்கள் அகதிகளாக இந்தியா வந்து அடுத்த ஆண்டு (இந்த ஆண்டு) இருபத்தைந்தாம் ஆண்டு வெள்ளிவிழா.........என சொன்னஉடனேயே முகாம் மக்கள் வேகமாக கைதட்டினார்கள்; ஏதோ மகிழ்ச்சியான செய்திபோல. அதிர்ந்துபோன ஆணையர் இந்த ஆண்டிலாவது நீங்கள் உங்கள் நாட்டிற்குத் திரும்பும் நல்லது நடக்கட்டுமென தொடர்ந்து பேசினார். அன்னிய நாட்டில் நம் பிழைப்பு இப்படித்தான் சிரிக்கிறது.
‘தமிழ் மாணவர் பேரவை’, ‘தமிழர் இளைஞர் பேரவை’ என இணைந்திருந்த மாணவ, மாணவிகளைக் கொண்டிருந்த வீர வரலாறு நமக்கு இருக்கிறதென்றாலும் முகாம்களில் படித்த, படிக்கும் மாணவ மாணவிகள் எத்தணைபேர் இன்றும் இணைந்து நற்செயல் செய்கின்றார்கள், வரலாற்றைத் தேடிப் படிக்கின்றார்கள் என கதைத்துப் பார்த்தால் தோள் நிமிர்த்திய நம்மால் தலை நிமிர்த்தவே முடிவதில்லை. உரிமைக் குடிமகளாஃனாய் பிறந்து அகதியானவர்களே மண்ணுலிப் பாம்பாக வாழும்போது, அகதியாகப் பிறந்த விடுதலை முகாமின் வீரச்சிறார்களை என்னவென்று சொல்லுவது.
வீரமண் பெற்ற வித்துக்களே, இந்த ‘வெள்ளி விழா’ ஆண்டிலிருந்தாவது வரலாறு படிக்க, கேட்க, எழுத உங்கள் குழந்தைகளை, ஆர்வப்படுத்துங்கள், மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள் இல்லையென்றால், எதிர்காலம் உங்கள் பிணக்குழிகளையும் தோண்டும், எச்சரிக்கை.
தோழமையுடன்
அருட்சகோதரர் சூ. ம. செயசீலன்

No comments: