இது ஒரு போலியான உலகம். மரபுகளாலும் மரபுசார்ந்த புனிதங்களாலும் கட்டியெழுப்பப்பட்ட புனைவுகள் பெண்களின் மனவலிமையை சுயவலிமையை மிகக் கொடுமையாக சிதைக்கிறது. பெண்ணுடல் வெளி ஆண் வன்முறைக்குப் பயிற்ச்சித்திடலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாதி மோதல், இனமோதல், போர் இவற்றில் அதிகம் பாதிக்கப்படுவது, பழிதீர்க்கப்படுவது பெண்கள், அவர்களின் உடல்;. இது மறுக்கமுடியாத வரலாற்று உண்மை. ஆனால் சொந்தச் சமூகத்திற்குள்ளேயே, தாங்கள் முழுமையாக நம்பும் மனிதர்களாலேயே பெண்கள் சீரழிக்கப் படுவது, சிதைக்கப் படுவது எவ்வளவு பெரிய கொடுமை.
ஈழப் போர்ச் சூழலில் திட்டமிட்டு நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் இனவெறியின் கேவலாமான முகம். அதை எதிர்கிறோம். போராடுகிறோம். இன்று நாம் சார்ந்திருக்கும் அகதிச் சமூகச் சூழலிலும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்கிறது, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், அவர்களைத் திசை மாற்றும் இரட்டை அர்த்தமுள்ள பேச்சுக்கள், காதல் என்னும் மாயைக்குள் இழுத்து சீரழித்தல் போன்றவை முகாம் வாழ்க்கைக்குள் அதிகரித்து வருகிறது. பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்தாலும் அவை வெளித் தெரியாமல் மூடி மறைக்கப்படுகிறது. காரணம் பெண் உடல் மீதான வன்முறையில் சமூகத்தின் பார்வையில் புரிதல் இல்லை,
வெளிக்கிளம்பும் பிரச்சனைகளை இழிவாகவும், கொச்சையாகவும் கதைத்து பாதிக்கப்பட்ட பெண்ணை மிகவும் கேவலமான நிலைக்குள் தள்ளுகிறது. மற்றவர்களின் வலியில் சுகம் காண்பது சிலருக்கு இயல்பாகிப் போனது. பிரச்சனையின் ஆழமறியாமல் விளையாட்டாய் சுற்றி வளைத்துப் பலவகையானக் கோணங்களிலும் கதைத்து பெண்ணின் வாழ்வைச் சிக்கலாக்குகின்றனர். இதனால் மனத்தெளிவும், முதிர்ச்சியும் இல்லாத இளம் குமர்ப்பெண்கள் வாழ்வைப்பற்றிய கவனத்தில் தடுமாற்றம் அடைகிறார்கள். இதுவே கயவர்களுக்கு உருதுணையாய் அமைகிறது. இதை தங்களுக்கு ஏதுவாக பயன்படுத்திக் கொள்ளும் கயவர்கள் அவர்களை நிரந்தரமாக தவறான பாதைக்குள் இழுத்துச் சென்றுவிடும் அபாயமும் நிகழ்கிறது.
பெற்றோர்கள் பெண் குழந்தைகள் விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஆண்களுடன் நெருங்கிப் பழகுதல், தொட்டுப் பழகுதல் போன்றவற்றில், இயல்பாகத் தொடுதலுக்கும் தவறாகத் தெடுதலுக்குமுள்ள வேறுபாடுகளை புரிந்துகொள்ள, கவனமாக இருக்க அவர்களுக்கு புரியும்படி தெளிவுபடுத்தல் வேண்டும். தவறான அனுகுமுறைகளுக்கு உடந்தையாகாமல் தங்களைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு பெண் குழந்தைகளுக்குள் வர வேண்டும். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மனதின் இளைப்பாரலுக்கும், மென்னையான கனவுகளுக்கும் பெற்றோர் துணையாக நின்றால், நம் குழந்தைகள் தான் நாளை சாதனைப் பெண்கள.;
இனவெறியின வன்கொடுமையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள அகதியாய் வந்தோம். இனி இனத்துரோகிகளிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வதில் எச்சரிக்கையாக இருப்போம்.
No comments:
Post a Comment