Friday, June 13, 2008

நாவலர் மன்றம்

--------------------------------------------------
(நாவலர் உள்ளே வருகிறார்)
மாணவர்கள் : வணக்கம் நாவலரே!
நாவலர் : வணக்கம். அதிகமான உற்சாகத்துடன் இருக்கிறீங்க. ஏதாவது சிறப்பானது...
கனிமொழி : ஓம். இந்த மாதம் இரு துறைகளில் சிறந்து விளங்கின ச.முருகானந்தம் பற்றி தெரிஞ்சுக்கப்போறோமே அதான்…
நாவலர் : மகிழ்ச்சி;. இருதுறைகளில் சிறந்து விளங்கினார்ன்னு எப்படிச் சொல்றீங்க?
இனியன் : நம்ம நூலகத்தில உள்ள ச.முருகானந்தம் அவர்களோட நூல்களில் இருந்து தெரிஞ்சுக்கிட்டோம்.
அபிநயா : சிறந்த எழுத்தாளராகவும்,சிறந்த மருத்துவராகவும் இருப்பதாக வாசித்தோம் நாவலரே.
நாவலர் : நீங்க சொன்னது மிகச்சரி.
நாவலர் : ச.முருகானந்தம் எங்கு படித்தார் என்பதையும் நீங்களே சொல்லுங்க.
இளவழகி : ஓம் சொல்லுறோம் நாவலரே! ச.முருகானந்தம் அவர்கள் கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி, யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீடம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.
நாவலர் : மிகச் சரியாக சொன்னீங்க. மாணவராக இருந்தபோதே எழுத ஆரம்பித்த ச.முருகானந்தம் அவர்களின் முதல் சிறுகதை 1976-ல் தினகரன் பத்திரிகையில் வெளியானது. அன்றிலிருந்து இன்றுவரை 175க்கும் மேலான சிறுகதைகள், 5 குறு நாவல்கள், 50க்கும் மேலான கவிதைகள் போன்றவைகளை எழுதியுள்ளார்.

கனிமொழி : நாவலரே, அய்யாவின் இரண்டு கதைகளை நான் வாசித்தேன். இரண்டுமே மக்கள் பிரச்சினைகளை மையமாக வச்சுத்தான் எழுதப்பட்டிருக்கு…
நாவலர் : ஓம். துன்பங்களும், பிரச்சனைகளும் நிறைந்துள்ள அன்றாட நடைமுறை வாழ்க்கை அனுபவங்கள்தான் ச.முருகானந்தம் அவர்களின் கதைக்கரு.
(மாணவர்கள் வியப்புடன் பார்த்தல்)
என்ன இப்படி பார்க்கறீங்க. சுற்றி நெருப்பு எரியும் போது அதைத்தானே முதலில் எழுத வேண்டும்.
பனிமலர் : இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லுங்க நாவலரே!
நாவலர் : ம்…சொல்றேன். சிறுகதை எழுத ஆரம்பித்த காலங்களில் சமூகத்தில் நிலவக்கூடிய சாதியம், சீதனம், பெண்ணியம், வர்க்க முரண்பாடுகள், மனித மனங்களின் சிக்கலான உணர்வுப் போராட்டங்கள் போன்றவைகளை கருப்பொருளாக வைத்து எழுதினார்.
யாழினி : பிறகு…
நாவலர் : போரும் அதன் அழிவுகளும் நிறைந்த போது அந்த இழப்பினையும், வலியையும் கருப்பொருளாகக் கொண்டு எழுதினார்.
பூவிழியாள் : அப்படின்னா அய்யாவோட நூல்களை வாசித்தாலே; நம் வரலாற்றை நாம் தெரிஞ்சுக்க முடியும் அப்படித்தானே…
நாவலர் : நிச்சயமாக. ‘தரை மீன்கள்’, ‘மீன் குஞ்சுகள்’, ‘இது எங்கள் தேசம்’, ‘இனி வானம் வசப்படும’;, ‘ஒரு மணமகளைத் தேடி’ எனும் 5 சிறுகதைத் தொகுதிகள், ‘நீ நடந்த பாதையிலே’ என்னும் கவிதைத் தொகுதி, ‘நாளை நமதே’ என்ற கட்டுரை நூல் என மொத்தம் 7 நூல்கள் வெளிவந்துள்ளன.
நளன் : அய்யா அவர்கள் பெற்ற பரிசுகளையும் சொல்லுங்க நாவலரே!
நாவவர் : சிறுகதைகள் மற்றும் கவிதைகளுக்காக 15 முறைகளுக்கும் மேலாக பரிசுகள் பெற்றிருக்கார். 2005 ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான சாகித்திய விருது இவரது ‘தரை மீன்கள்’ நூலுக்கு கிடைத்தது. ‘மீன் குஞ்சுகள்’ சிறுகதை சென்னை இலக்கிய சிந்தனை பரிசு பெற்றது.
கனிமொழி : மருத்துவராக ஆற்றிய பணிகளையும் சொல்லுங்க நாவலரே!
யாழினி : நான் சொல்றேன் நாவலரே!
நாவலர் : மருத்துவப் பணி செய்ய நியமனக் கடிதம் பெற்றுக் கொண்ட அய்யா அவர்கள் வன்னியில் யானைகள் சூழ்;ந்த அக்கராயன் பகுதிக்கு வந்தார். யானை பயமும் நுளம்புக் கடியும் இருந்ததால இரவு மட்டும் தங்கிவிட்டு சொந்த ஊருக்குப் போயிட்டாரு…ஆனாலும் திரும்பி வந்து அக்கராயன், வன்னேரிக்குளம் ஆகிய குடியேற்றக் கிராமங்களில் 30 ஆண்டுகள் சேவை செய்தார்.
நளன் : இலங்கை மாதிரி நாட்டுல தமிழ் மருத்துவர்கள் பணிபுரிவது கடினமாச்சே.
குழலினி : ஓம். பொதுமக்களுக்கும், போராட்டத்தில் அடிபட்டவங்களுக்கும் மருத்துவ சேவை செய்யும் போது பலமுறை விசாரிக்கப்பட்டிருக்கிறார். பயமுறுத்தலும் நிகழ்ந்தது. ஆனாலும் துணிவுடன் சேவை செய்தார்.
யாழினி : அதோட அப்பகுதியில் கல்வியறிவைப் பெருக்கினார். மூடநம்பிக்கையைக் குறைத்தார், சுற்றி இருந்த கிராமங்களில் மது ஒழிப்பைக் கொணர்ந்தார்.
பூவிழியாள் : கேட்கவே மிகவும்; மகிழ்ச்சியாக இருக்கு.
நாவலர் : அடுத்தமாத நாவலர் மன்றத்திற்கு மூத்த எழுத்தாளர் நந்தி அவர்களைப் பற்றி தகவல் சேகரித்து வாருங்கள், சரியா…. நன்றி.
மாணவர்கள் : நன்றி நாவலரே.
-------------------------------------------------

No comments:

Post a Comment