Friday, June 13, 2008

வலி -- சூ. ம. செயசீலன்

விடுதலை முகாமின் வீரச்சிறார்களே!
வரைந்து கிடப்பவைகளும், எழுதி இருப்பவைகளும், செவிவழி கடத்தப்பட்டவைகளும் வலி நிறைந்தது வரலாறு, வலியால் நிறைந்ததும் வரலாறு என பதிவு செய்திருக்கின்றன வரலாற்றை.
திசையும் மொழியும் பிரித்து வைத்தாலும் இணைத்திடுவது வலி. முகம் காணா நட்பு கொண்டு நண்பன் கோப்பெருஞ்சோழன் இறந்ததும் வடக்கிருந்து உயிர் துறந்த பிசிராந்தையாரை புறனானூரும், ‘இமயமலையில் ஒருவன் இருமினான் குமரியிலிருந்து மருந்து கொண்டோடினான்’ என பாரதிதாசனும் பதிவு செய்தது ‘வலியில் இணைதல்’. சுழலும் பூமியின் எத்திசையில் இருப்போரின் வலியிலும் வலிகாண்பதும், பகுத்தறிவற்ற உயிர்களுக்காகவும் உரிமை பேசுவதும் வலியில் இணைதலின் தொடர்ச்சியே.
‘வலியில் இணைதல்’ ஆயுதம் வழி நிகழ்வது மட்டுமல்ல. உணர்வின் வழி, ஊக்கத்தின் வழி, பதிவதின் வழி நிகழ்வது. ‘ நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என எதிரி தீர்மானிக்கும்’ போது ஆயுதமும், அறமும் கால இடைவெளியில் முன்னிலை பெறுவதும் அத்தகையதே. விடுதலை வேள்வியில் தீபமேற்றிய ஒவ்வொரு நாடும் தந்துள்ள பதிவு இது.
கரம் கோர்த்து களம் கண்டு, 1948-ல் கண்ட சுதந்திரம் தமிழை, தமிழரைக் காக்குமா? என சிந்தி;த்த காலத்தில் நிகழ்ந்தேறிய இனப்பாகுபாடும், படுகொலையும் உணர்வுகளை உசுப்பியதும், உணர்வாளர்களை செயல்முனையத் தூண்டியதும், ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைகளுக்கு இவ்வரலாற்றை சொல்லிச் சொல்லி வளர்த்ததும் வரலாறு. தலைவரும் விதிவிலக்கல்ல (குசழவெடiநெஇனுநஉ.30இ 1985).

ஆண்டுதோறும் பாடசாலைகளிலும், பணியிடங்களிலும், பொது இடங்களிலும் பெற்ற வலி ‘எமது தலைவிதியை நாமே நிர்ணயிக்கும் உரிமை பெற்றவர்களாக, இறைமை பெற்றவர்களாக இருக்க வேண்டும்’ என ஒவ்வொருவரையும் எழுப்பியது. 1983-ல் தமிழர்களை கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி மொத்தமாக இடம்பெயர வைத்த ஆடிக்கலவரம் எழும்பிய கரங்களை இணைத்தது. இணைந்தெழுந்தவர்கள் கம்யூனிசம் பேசி…..பிறகு ஆயுதம் கண்டார்கள் ஆயுதம் தாங்கி….. பிறகு மார்க்சிய- லெனினிய பாதைக்கு வந்தார்கள் சிலர் ஆட்சியாளர்களுடன் சமபந்தி கண்டார்கள்.
அமைதியைக் குலைத்தவர்களாலும், அமைதிக்கு வந்தவர்களாலும் வலி அதிகமானது. முதலாமவர்கள் ; நல்ல முடிவு பாராளுமன்றத்தில் கிடைக்குமென்றார்கள், அழித்திட சட்டமும் அங்கே இயற்றினார்கள். தமிழ் பிரதிநிதிகளுக்கு பாராளுமன்றத்தில் தடை, பத்திரிகை சுதந்திரந் தடை, மக்கள் வாழ்விடங்களில் குண்டு மழை, உணர்வாளர்களைக் கொன்று குழிகளைத் தோண்டித் தோண்டி புதைத்துப் போன செம்மணி புதைவெளி என சுதந்திர முன்னெடுப்புக்காக அடைந்த வலிகள் அதிகம்.
இரண்டாமவர்கள் 1987 அக்டோபர் 10-ம் திகதி தீட்டிய திட்டத்தால் அதே நாளில் ஈழமுரசு மற்றும் முரசொலி பத்திரிகை அலுவலகங்கள் தாக்கி அழிக்கப்பட்டன. அக்.21-ம் திகதி மருத்துவமனை தாக்கப்பட்டபோது பிணங்களோடு பிணங்களாக படுத்து தப்பித்த சோகம் நிகழ்ந்தது. ஏன் கைது செய்யப்பட்டோம்? எதற்கு அடைக்கப்பட்டோம்? எப்போது விசாரணை? எப்போது விடுதலை? என தனக்கும் தெரியாமல், அதிகாரிக்கும் தெரியாமல் சிறை இருட்டுக்குள் அடிபட்டவர்கள் அதிகம். இவர்களில் பலர் இன்றும் நம் வீடுகளில் அல்லது நம் முகாம்களில் வரலாறாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பதிவுசெய்ய வேண்டியவைகள் நிறைய உண்டு.

அரை நூற்றாண்டுக்கு முந்தைய பெற்றோர்களின் வேகமும், விவேகமும், வரலாற்றை பதிவுசெய்யவேண்டியதன் அவசியமும் புரிந்துள்ளவர்கள் இன்று அரிதாகிப் போய்விட்டார்களோ என்ற அச்ச உணர்வு மேலோங்குகிறது. வலியோடு போராடி ‘நிதித்துறை’, ‘நீதித்துறை’, ‘காவல்துறை’, ‘வனத்துறை’, அரசியல் துறை’ என அமைத்து நமக்கான எதிர்காலத்தை உருவாக்கி வரும் வீர வரலாற்றை உள்ளத்தில் ஏந்துவதும், ஏற்றுவதும், காலத்தின் அவசியம்.
அவசியம் மறந்த நமக்குள்ளே கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் எத்தனை கொள்ளைகள், காதல் விளையாட்டுக்கள், களியாட்டங்கள், உறவு தவறிய உறவுகள், தமிங்கில உரையாடல்கள்….இதில் ஏதாவதொன்று நம் வரலாறு சொல்கிறதா? வரலாறு தெரியாத புதிய இனம் இவ்வுலகில் வளருவது பேரழிவல்லவா?. அது நம் தமிழினம் என்பதும் அதை உருவாக்குவது நாம் என்பதும் இழிவல்லவா?
வரலாறு தெரியாது உருவாகும் நம் இனம் ஒருநாள் சுதந்திர பூமிக்கு செல்லும். மலசலக் குழிக்குள் முட்டி நிற்கும் நம் வீர எலும்புகள் எப்படி இங்கு வந்ததெனத் தெரியாது விழிபிதுக்கும். வீடு கட்ட தோண்டும் குழிகளில் இருந்து மொத்தம் மொத்தமாய் வெளிவரும் ஆடைகளும், எலும்புகளும் நம் வீரமக்களுடையது எனத் தெரியாது குறிபார்க்கும், செய்விணை எனச்சொல்லி வலி நிறைந்த வீரத்தை அடகுவைக்கும். உனது வீரமும், வீர வரலாறும் மொத்தமாய் சிதைந்து போகும். இதுதானா நமது இலட்சியம்?.
முடிவெடுங்கள். தூய்மையான வரலாறு பாய்ச்சப்படும் இரத்தம் துணிவுபெற்றெழும், தனக்கான வரலாற்றை தானே பதிவுசெய்யும் என்பது நம் முன்னோர்கள் கற்றுத்தந்த பாடம். எப்போது நாம் புரிந்துகொள்ளப்போகிறோம் இதை?

No comments:

Post a Comment