-------------------------------
இயல்வாணன்
------------------------------
நான் தூஷிக்கப்பட்டேன்
மிகப்கொடிய வார்த்தைகளால்
நான் பயமுறுத்தப்பட்டேன்
பெயரறியாப் பிசாசுகளால்
நான் தாக்கப்பட்டேன்
இதயமற்றவர்களின்
இரும்புக் கம்பிகளால்
சிறைக் கதவுகள் திறக்கப்பட்டிருப்பது
எனக்காகவென்று
எச்சரிக்கப்பட்டேன் பலநூறு பேரால்
உனக்கும் இது நேர்ந்ததா?
நண்பனே?
எங்கள் தெருக்கள் வழிமறிக்கப்பட்டன.
எங்களுக்கு
நிர்வாணமாக வருவதே
புத்திசாலித்தனமென்று
சோதனைச் சாவடிகள்
ஆலோசனை சொல்லின.
மலங்கழிக்கவும் சலம் விடவும்
பற்றைகளை நாடுபவர்
கொல்லப்பட வேண்டிய கெரில்லாக்காரரென
சட்டவிதிகள் உருமாற்றின மனிதர்களை.
தெரு வீடு பாடசாலை அலுவலகம்
எங்காயினும்
மரணத்துக்கும் பிடிவிறாந்துக்கும்
அவசர அனுமதி தரப்பட்டது.
உன்னூரிலும் இது நடந்ததா
நண்பனே?
ஒரு துப்பாக்கியையோ
இரும்புக் கம்பியையோ
கனவு
திரும்பத் திரும்பத் திரையிடுகிறது.
தூக்கம் கெடும் போதெல்லாம்
சுற்றிலும்
பிசாசுகளின் அரவம் கேட்கிறது.
சூனியத்தில் சுழலும் மனது
திடீரெனப்
பரந்து வீரியம் கொள்கிறது.
எல்லாவற்றிலும் மோதி
எதிரொலிக்கும் உணர்வில்
குருதி
குதித்துப் புரள்கிறது.
உனக்கும் தோன்றியதா
இந்த உணர்வு?
நன்றி: 20-ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்.
------------------------------------------
No comments:
Post a Comment