````````````````````````````````````````````````````````
சூ. ம. செ
````````````````````````````````````````````````````````
( நாவலர் உள்ளே வருகின்றார்......)
மாணவர்கள் : வணக்கம் நாவலரே!
நாவலர் : நம் ஈழநாட்டின் தேசிய மலரான கார்த்திகா மலர்போல் முகமலர்ச்சியுடன் உள்ள என் இனிய மாணவர்களே வணக்கம்.
மார்க்சிம்: நாவலரே இன்று ஆரம்பமே படு ஜோரா இருக்கு.
யாழினி: நம்மைப் பார்த்தாலே நாவலருக்கு கவிதை சுரக்குது. அப்படித்தானே நாவலரே.
நாவலர்: ஓம். சரி, இந்த மாத எழுத்தாளர் பேராசிரியர் ‘ நந்தி’ அவர்களைப் பற்றி பேச இருக்கிறோம். யாராவது தகவல் சேகரித்துட்டு வந்திருக்கிறீங்களா?.
கனிமொழி : ஓம் நாவலரே. மூத்த எழுத்தாளரான நந்தி அவர்களின் இயற்பெயர் செ.சிவஞானசுந்தரம். நந்தி அவர்கள் 1928 ம் ஆண்டு மார்ச் 30ம் திகதி பிறந்தார்.
நாவலர்: மிகச்சரியாகச் சொன்னீங்க. பெரும்பாலும் சிறப்படைந்த எழுத்தாளர்களுடைய பின்னணிகள் நமக்குக் கிடைப்பதில்லை. ஆனால் நந்தி அவர்களுடையப் பின்னணி நமக்குக் கொஞசம் கிடைத்துள்ளது.
கார்க்கி: அப்படியா! சொல்லுங்க நாவலரே.
நாவலர்: ஓம். தமிழும் இலக்கியமும் நந்தி அவர்களின் இரத்தத்தில் கலந்தஒன்று. தாய் வழிப்பாட்டன் தமிழிலக்கிய அறிஞராகவும், பகுத்தறிவு வாதியாகவும் விளங்கியிருக்கார். மறைந்த பேராசிரியர் வி. செல்வநாயகம் இவரது சிறிய தகப்பனார். அதனால தமிழும், இலக்கிய உணர்வும் இளம் வயதிலேயே இவரை ஆட்கொண்டுவிட்டது.இளவழகி: அப்படின்னா, நந்தி அவர்கள் சிறந்த பேராசிரியராக இருந்திருப்பாங்களே.....
நாவலர் : பேராசிரியர்தான். ஆனால் தமிழிலக்கிய பேராசிரியர் அல்ல. இலக்கியத்தின் மேல் ஈர்ப்புக் கொண்டிருந்தாலும் நந்தி அவர்கள் மருத்துவ நிபுணராகத்தான் பணியாற்றினார் அதனால பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், மருத்துவப்பீடத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். உலக சுகாதார மையத்தின் சார்பில் பல நாடுகளுக்கும் சென்று பயிற்சிப் பட்டறைகளும் நடத்தியுள்ளார்.
பனிமலர்: மருத்துவத்துறையிலயும், இலக்கியத்துறையிலயும் ஆர்வத்தோடு செயல்பட்ட நந்தி அவர்களின் முதல் படைப்பு எப்போது வந்தது நாவலரே.
நாவலர் : 1947ல் பட்டப்படிப்பு முன்னிலைக்கல்வி படித்துக்கொண்டிருந்தபோதுதான் பத்திரிகைகளில் எழுதத் துவங்கினார். இவரது முதல் சிறுகதையான ‘சஞ்சலமும் சந்தேகமும்’ 1947ல் வீரகேசரியில் வெளிவந்தது.
திலீபன் : கிராமச் சூழமைவில் வாழ்ந்த நந்தி அவர்கள்,தொழில் காரணமாக சிங்களவர்கள் மற்றும் மலையகத் தமிழ் மக்கள் மத்தியிலும் பணிசெய்து வாழ்ந்ததாகக் கேள்விப்பட்டேன் உண்மையா நாவலரே?.
நாவலர் : உண்மைதான். இப்படிப்பட்டச் சூழமைவுகளில் வாழ்ந்ததால்தான் நந்தியின் படைப்புக்களில் உண்மையும், நேர்மையும், மனிதநேயமும் மிளிர்வதைக் காண முடிகிறது.
கனிமொழி: மக்களின் உணர்வுகளை மையப்படுத்தித்தான் எழுதினாங்களா! கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. நந்தி அவர்களின் படைப்புகளைப் பற்றியும் சொல்லுங்க நாவலரே.
நாவலர்: நந்தி அவர்கள் இதுவரை எண்பதுக்கும் அதிகமான சிறுகதைகளை எழுதியுள்ளார்.அவைகள்; ‘ஊர் நம்புமா?’, கண்களுக்கு அப்பால்’, ‘நதியின் கதைகள்’, ‘தரிசனம்’ என நான்கு தொகுதிகளாக வெளிவந்துள்ளது. மேலும்; ‘மலைக்கொழுந்து’, ‘தங்கச்சியம்மா’, ‘நம்பிக்கைகள்’ என்ற தலைபுகளில் இவரது நாவல்களும் வெளிவந்துள்ளது.
பூவிழியாள்: மருத்துவப் பேராசிரியராக இருந்ததுனால அவை சம்பந்தமாகவும் புத்தகங்கள் எழுதியிருப்பாங்களே....
நாவலர் : ஓம். ‘அருமைத் தங்கைக்கு’, ‘அன்புள்ள நந்தினி’, ‘நந்தினி உன் பிள்ளை’இ ‘உங்களைப் பற்றி’, போன்ற மருத்துவ நூல்களை எழுதியுளார். அவைகள் பெண்களுக்கும், மருத்துவம் கற்றுக்கொடுக்கும் போராசிரியருக்கும் கையேடுகளாக விளங்குகின்றன.
பனிமலர் : 1947 ல் எழுத ஆரம்பித்த நந்தி அவர்களுக்கு மணிவிழாக்காலம் கடந்திருச்சு இதைஒட்டி ஏதாவது சிறப்பு நிகழ்வுகள் நிகழ்ந்ததா நாவலரே?நாவலர் : ஓம். நந்தி அவர்களின் இலக்கிய நுழைவின் மணிவிழாவினை முன்னிட்டு “நந்தியின் சிறுகதைகள்” என்ற நூலை அவரது நண்பர்கள் வெளியிட்டுள்ளார்கள். என். சோமகாந்தன் என்ற எழுத்தாளர் “ நந்தி-நோக்குகள் இருபத்தைந்து” என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
யாழினி: நாவலரே நம்ம நூலகத்தில் என். சோமகாந்தன் அவர்களின் நூல் இருக்கிறது. அதில் கட்டுரை எழுதியுள்ள பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் “ஈழத்தின் நவீன இலக்கிய வரலாற்றில் நந்தி எனும் எழுத்தாளனுக்கு ஒரு மதிப்பார்ந்த இடம் உண்டு. நந்தியின் ஆக்கங்கள் இல்லாத ஈழத்துத் தமிழ் நாவலும் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையும் நிச்சயமாக வளக்குறைபாடு உடையதாகவே இருக்கும்”என எழுதியுள்ளார்.
நாவலர்: மகிழ்ச்சி. சரி அடுத்தமாத நாவலர் மன்றத்தில் எழுத்தாளர் கே.கணேஷ் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். நன்றி.
மாணவர்கள் : நன்றி நாவலரே.
மாணவச் செல்லங்களே எழுத்தாளர் கே.கணேஷ் அவர்களைப்பற்றிய தகவல்களைச் சேகரித்து நாவலர் மன்றத்திற்கு அனுப்புங்கள்.
மாணவச் செல்லங்களே எழுத்தாளர் கே.கணேஷ் அவர்களைப்பற்றிய தகவல்களைச் சேகரித்து நாவலர் மன்றத்திற்கு அனுப்புங்கள்.
No comments:
Post a Comment