Thursday, July 10, 2008

விளையாட்டு

```````````````````````````````````````````````````````
விடுதலை முகாமின் வீரச்சிறார்களே!
இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டின் ஒருநாள் கல்லூரி மாணவர்களின் கூட்டம் திருச்சி, வாழவந்தான் கோட்டை முகாமில் நடந்தது. பலவாறு விவாதித்தவர்களிடம் தன் நாடு பற்றிய புரிதல் எப்படி உள்ளதென நாடிபார்த்து உரையாடல் தொடர்ந்தேன். அமர்வு முடிந்து வெளியேறியபோது திருச்சி, கொட்டப்பட்டு முகாமின் மாணவர் தனியே கேட்டார். ‘இலங்கை துடுப்பாட்ட அணியை நாம் ஆதரிப்பது என்பது இலங்கையை ஆதரிப்பதற்கு சமம்தானே. இத்தனை ஆண்டின் வீர இழப்புகளும் இது போன்ற ஆதரிப்பினால் வேரிழந்து போகாதா?’.
மொழி, பண்பாடு, வணப்பு, தட்ப வெப்பம், இன உணர்வு, உணவு முறைகளைப் போலவே விளையாட்டுக்களும் இனத்திற்கு இனம் தனித்துவமாய் மிளிரக்கூடியவைகள். விளையாட்டுக்கள் ஒற்றுமையின் அடையாளம். ஒரு நாடு தன் தேசியத்தை வளர்த்தெடுக்கவும், ஒற்றுமையை உலகறியச் செய்யவும் உதவுபவை. மனவலி போக்குவதும், பக்குவப்படுத்துவதும், ஆரோக்கியம் தருவதும் விளையாட்டுக்கள்.
சாக்கு ஓட்டம், தவளைப் பாய்ச்சல், ஆடுபுலி ஆட்டம், கிட்டி அடித்தல், பல்லாங்;குழி என விதவிதமான விளையாட்டுக்களை ஆடிய அனுபவம் நமக்கும் உண்டு. துள்ளி வரும் காளை அடக்கி வீரம் மெய்ப்பித்தவர்கள் நாம். தனித்துவம் கொண்ட நம்நாட்டு கைப்பந்து முறையை அடுத்தடுத்த தலைமுறைக்கும் மடைமாற்றம் செய்து தொடர்ந்து ஒளிர்பவர்கள் நாம். உலகக்; கைப்பந்து முறைமைகளையும் கற்றுக்கொண்டு தடம்பதிப்பதிலும் சலைத்தவர்கள் அல்ல.
ஆனால் சிலகாலமாகவே, இறக்குமதியான துடுப்பாட்டத்தை மிகப்பலரும் உயிர்காக்கும் இரத்தமாக, நீராக, உணவாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். பள்ளி செல்பவர்கள்கூட சிந்தனை வளர்க்கும் நல் நூல்கள் படிக்கவும், தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும் நேரம் இல்லையெனச் சொல்லி துடுப்பாட்டம் காண்கிறார்கள். மட்டையும் பந்துமாக கறுத்துப்போகிறார்கள். ஆண்டில் பலநாட்கள் முடங்கிப்போகிறார்கள்.
ஈழத்தின் தேசிய விளையாட்டு (கிள்ளித்தட்டு) எது, எப்படி எனத்தெரியாது போட்டியில் கலந்துகொண்டு ஆட்டத்தின் இடையே அடிக்கும்போது ‘ஏம்பிள்ளை என்னை அடித்தாய்?’ என அறியாமை வெளிப்படுத்தியதும் நிகழ்ந்திருக்கிறது. (நாகரீகம் கருதி முகாம் பெயரைத் தவிர்க்கிறேன்).
நாம் நம் சுயத்தை இழந்தாலும, சுதந்திர மூச்சை புகைமேகங்கள் தடுக்கமுடியாதென தொடர்ந்து செயல்படும் நம் சொந்தங்களால் வண்ண வண்ண விளக்கிட்டு, சிட்டுக்களை ஆடவிட்டு, கோடிகளில் புரளும் வீரர்களைக் கொண்டு விளையாட்டுக்கள் நடத்தமுடியாதுதான். ஆடுகிறேன் ஆட்டமெனச் சொல்லி நாடுவிட்டு நாடு பறக்க முடியாதுதான். நரம்பெல்லாம் சுதந்திரமே ஓடும் போது தரணி புகழ எப்படி விளையாட்டு நடத்த முடியும். குடியுரிமையற்ற அகதிச் சூழலி;ல் நம்மால் மட்டும் முடியவாச் செய்கிறது. இருப்பினும் தமிழர்கள் நாங்கள் இனத்தாலும் மொழியாலும் ஒன்றிணைவோம் என முழக்கமிட்டு ஈழம்; விளையாட்டுக் கழகம் தொடங்கியுள்ளார்கள் நம்மவர்கள். முக்கிய சிறிய நிகழ்வுகள் பதிவு பெறாமல் போவதென்பது வரலாறு தோறும் நிகழும் வேளையில் நம் மக்கள் புலம்பெயர்ந்த பகுதிகளில் நடைபெறும் விளையாட்டுச் சாதனைகளை பதிவு செய்கிறார்கள் நம் இரத்தங்கள் என எண்ணும்போதே நெஞ்சம் நிறைகிறது.
மகிழ்ச்சியின், இணைவின், எழுச்சியின் அடையாளமாக மட்டுமல்ல விளையாட்டுக்களை எதிர்ப்பின் அடையாளமாக்க முடியும். நியாயங்கள் வேலியிடப்படும் போதும், சுதந்திரம் மறுக்கப்படும் போதும் ஒற்றுமை சொல்லும் விளையாட்டுக்களை எதிர்க்குரலாக்க முடியும். நிகழ்வெளியில் ஆதாரங்கள் நிறைந்து கிடக்கின்றன.
சீனாவிடமிருந்து தனிநாடு பெற்று சுயமாய் நிற்க அய்ம்பது ஆண்டுகளாக முயன்று வரும் திபெத் தன் முயற்சியை உலகத்தின் கவணத்தில் கொண்டுவர இந்த ஆண்டு (2008) சீனாவில் நிகழவிருக்கின்ற ஒலிம்பிக் போட்டிகளை எதிர்ப்பின் அடையாளமாக்கி இருக்கிறது. விளைவு, எங்கெல்லாம் ஒலிம்பிக் சுடர் வலம் வந்ததோ அங்கெல்லாம் அங்குள்ள திபெத்தியர்கள் தங்கள் எதிர்ப்பினை பதிவுசெய்திருக்கிறார்கள்.
1976-ம் ஆண்டின் உலக ஒலிம்பிக் போட்டியை தென்னாப்பிரிக்காவுடன் (கறுப்பர்கள்) இணைந்து நியூசிலாந்து (வெள்ளையர்கள்) நடத்தியதால் வெள்ளை இனவாத அரசியலுக்கு எதிராக 22 ஆப்பிரிக்க நாடுகள் உலக ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணித்து எதிர்ப்பு காட்டின. 1977-ல் கிலெனிசுல் என்ற இடத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
மொஸ்கோ, ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததை எதிர்த்து 1980-ல் மொஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணித்து எதிர்ப்பை பதிவுசெய்தது அமெரிக்கா (பின்னாளில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானையும் ஆக்கிமித்தது என்பதும் வரலாறு). குவைத்தை ஈராக் ஆக்கிரமித்ததால் 1990 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாட ஈராக்கிற்கு ஆசிய ஒலிம்பிக் குழு தடைவிதித்து தன் எதிர்ப்பை பதிவுசெய்தது.
ஒன்பதாவது உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் இலங்கை பங்கேற்றபோது ஒரு போட்டியின் நடுவே புலிக்கொடியை துக்கிக்கொண்டு ஓடினார் மயூரன். விசாரித்தபோது “ஈழத்தமிழர் பிரச்சனையை அனைத்துலக சமூகத்துக்கும் எடுத்துச் செல்லும் நோக்கத்துடனே நான் மைதானத்தின் உள்நுழைந்தேன்” என தன் எதிர்ப்பை பதிவுசெய்தார் நம் ஈழத்துக் குலக்கொழுந்து.
நியாயம் வேண்டுவோர், சுதந்திரமாய் நிற்க ஒரு பிடி மண் வேண்டுவோர், துடிப்போசை அடங்குமுன் குடிமகன் என்றொரு அங்கிகாரம் வேண்டுவோர், அடிமை பூமியையல்லாமல் சொந்த நாட்டை உரிமையாக கொடுத்துச்செல்ல நினைப்போர் எல்லோருக்குமே தங்கள் எதிர்ப்பினைப் பதிவுசெய்ய பரந்த ஊடகங்களும், திரண்ட மக்கள் கூட்டமும், அளப்பெரிய வாய்ப்புகளும் தேவைப்பட்டதில்லை.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், சிறு துறும்பும் பல் குத்த உதவும் என்ற பழமொழிக்கேற்ப கிடைத்த சின்னஞ்சிறிய வாய்ப்புகளையெல்லாம் எதிர்ப்பை பதிவுசெய்யும் ஆயுதமாக்கிக் கொண்டார்கள். திபெத்தியர்களும், ஆப்பிரிக்கர்களும், ஈழத்தமிழர்களும் மட்டுமல்லாமல் மானமும், அறச்சினமும்கொண்ட ஒவ்வொரு மக்களும், மக்களினமும் வாழ்ந்து சொன்ன பதில் இது.
மீண்டும் ஒருமுறை கொட்டப்பட்டு மாணவரின் கேள்வியை வாசியுங்கள். சிந்தியுங்கள். உங்கள் பதில் என்ன?. உங்கள் பதில் உங்களை வலுப்படுத்தட்டும். இரத்த நாளங்களில் இட்டுவையுங்கள் உயிரூட்டட்டும். சிறு பொறிதான் இருளை அகற்றும் மறந்துவிடாதீர்கள்.
தோழமையுடன்
அருட்சகோதரர் சூ. ம. செயசீலன்

No comments:

Post a Comment